ஆன்மிகம்
சிவலிங்கம் வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ விரதம்

Published On 2020-05-20 03:52 GMT   |   Update On 2020-05-20 03:52 GMT
பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளம் உருகி பாராயணம் செய்ய வேண்டும்.
சிவபெருமானுக்குரிய வழிபாடுகளில் பிரதோஷ கால விரத வழிபாடு முக்கியமானது. பிரதோஷம் என்பது ஆன்மாக்களின் முற்பிறப்புக் குற்றங்களை நீக்குவதாகும். சூரியனின் மறைதலோடு தொடங்கும் பிரதோஷ காலம் இறைவனின் திருவடிகளில் மனம் ஒடுங்கி சரணாகதி அடைய உகந்ததாகும்.

பிரதி மாதம் வளர்பிறை தேய்பிறையில் திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலமே ‘பிரதோஷ காலம்’ எனப்படும்.

புராணக்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி, பாற்கடலை கடைய முடிவு செய்தனர். மேரு மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தபோது, வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. அந்த விஷம் உலக உயிர்களை அழிக்காமல் இருக்க, சிவபெருமான் அதை உண்டாா். அம்பிகையால் சிவன் விழுங்கிய விஷம், அவரது கழுத்திலேயே நின்றது. இதையடுத்து இந்த உலகம் உய்யவும், தேவர்கள் மகிழவும் சிவபெருமான் கையில் தமருகம் ஏந்தி நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் திருநடனம் புரிந்தார். அவர் ஆடிய காலமே பிரதோஷ காலமாக வழிபாடு செய்யப்படுகிறது.

தேவர்களுக்கு திருநடனக் காட்சி தந்த நாள் ஒரு கார்த்திகை மாத சனிக்கிழமை ஆகும். ஆகவேதான் சனிப் பிரதோஷம் சிறப்பு பெறுகிறது. பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளம் உருகி பாராயணம் செய்ய வேண்டும். நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், நெய்விளக்கு ஏற்றுதல், தானதருமம் செய்தல் போன்றவை புண்ணியம் தரும். அக்காலத்தில் இறைவனை நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு நடுவில் தரிசனம் செய்து வணங்குதல் நன்று.

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாட்டால் கல்வி பெருகும். செல்வம் வளரும், நோய்கள் விலகும், கடன், மனக்கவலை அகலும். ஒரு பிரதோஷ பூஜை ஆயிரம் சிவபூஜை செய்தமைக்கு சமம். ஆகவே பலன்களும் அதிகம். இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்தால், அளவற்ற நன்மைகள் அடையலாம்.
Tags:    

Similar News