உள்ளூர் செய்திகள்
பல்லடம், திருப்பூரில் வீட்டின் மேற்கூரைகள் காற்றில் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

திருப்பூரில் கோடை வெப்பத்தை தணித்த மழை

Published On 2022-05-05 10:41 GMT   |   Update On 2022-05-05 10:41 GMT
சாக்கடை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து வெளி யேறியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி யடைந்தனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. 102 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்தநிலையில் நேற்றிரவு 9 மணியளவில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.  சுமார் 2மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.  

சாக்கடை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து வெளியேறியதால் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பல இடங்களில் சாலைகள்சேறும் சகதியுமாக மாறின. இருப்பினும் கோடை வெப்பத்தை தணித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சில இடங்களில் சூறைக்காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

திருப்பூர் வடக்கு-40, அவினாசி-7, பல்லடம்-26, ஊத்துக்குளி-37, காங்கேயம்-23, தாரா புரம்-7, மூலனூர்-4, குண்டடம்-2, திருமூர்த்தி அணை-7, அமராவதி அணை-18, உடுமலை-4.30, மடத்துக்குளம்-5, கலெக்டரேட்-51, வெள்ளகோவில் ஆர்.ஐ.அலுவலகம்- 12.30, திருமூர்த்தி அணை ஐ.பி.-6, திருப்பூர் தெற்கு -42, கலெக்டரேட் கேம்ப் அலுவலகம் -49. மொத்தம் 340.60 மி.மீ. மழை பெய்துள்ளது.  

பல்லடத்தில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக் காற்று வீசியதால் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிமெண்ட் கூரை வீடுகள், மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. பலத்த இடி, மின்னல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 

மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்ததில் ராஜு, மகாலட்சுமி, சம்பு நாத் பாட்டி, சர்வேஷ் யாதவ், உள்ளிட்டோர் காயமடைந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News