ஆன்மிகம்
வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை தைப்பூச விழா

Published On 2021-01-27 03:43 GMT   |   Update On 2021-01-27 03:43 GMT
வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூச விழா நடைபெற உள்ளது. வருகிற 29-ந்தேதி 5 சுவாமிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்சியை அடுத்த குமார வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில் தைப்பூசப் பெருவிழா நாளை (வியாழக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அர்ச்சனைகள் நடைபெறும்.

பகல் 12 மணியளவில் அபிஷேக ஆராதனை நடைபெறும். 1 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவர் முத்துகுமாரசுவாமி புறப்பட்டு உய்யகொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருள்வார். அதன் பின்னர் அதவத்தூர் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.30 மணி அளவில் சுவாமிக்கு சர்வ அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறும்.

இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக வரகாந்திடலை இரவு 10 மணிக்கு அடைகிறார். அங்கு மண்டகப்படி பெற்று கீழ வயலூர் தைப்பூச மண்டபத்திற்கு இரவு 11 மணிக்கு வந்தடைகிறார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்று நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு வடகாபுத்தூர் கிராமம் வந்தடைகிறார்.

29-ம் தேதி காலை 8.30 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் சுவாமி, அல்லித்துறை பார்வதீஸ்வரர் சுவாமி, சோழங்கநல்லூர் காசி விஸ்வநாத சுவாமி, சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு சோமரசம்பேட்டை நான்கு வீதிகளில் 5 சுவாமிகளும் வலம் வந்து சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்தில் பகல் 12 மணிக்கு எழுந்தருள்வார்கள்.

அங்கு அனைத்து சுவாமிகளும் தங்கி இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இரவு 7.15 மணிக்கு மேல் தத்தமது திருக்கோவில்களுக்கு சுவாமிகள் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் வருவதற்காக திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வயலூர் முருகன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் செயல் அதிகாரி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News