செய்திகள்
கோப்புபடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினமும் 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை தகவல்

Published On 2021-06-09 15:02 GMT   |   Update On 2021-06-09 15:02 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் தினமும் 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் கூறினர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டாலும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை, சிகிச்சை, இறந்தவர்கள் பற்றிய விவரங்கள், நாகை மாவட்டத்துடன் சேர்த்து தான் வெளியிடப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்காக கட்டுப்பாட்டு அறை மயிலாடுதுறை மாவட்டத்துக்கு என தனியாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து மயிலாடுதுறையில் கட்டப்பாட்டு அறை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த 6-ந் தேதி வரை 63 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 17 ஆயிரத்து 276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 2 ஆயிரத்து 663 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 ஆயிரத்து 234 பேர் வீட்டு தனிமையிலும், 429 பேர் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 13 ஆயிரத்து 303 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 51 ஆயிரத்து 351 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 75 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் தினமும் சராசரியாக 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் சராசரியாக 270 பேருக்கு தொற்று உறுதி என முடிவுகள் வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News