செய்திகள்
தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளை படத்தில் காணலாம்.

பெரம்பலூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம்

Published On 2020-01-11 18:07 GMT   |   Update On 2020-01-11 18:07 GMT
பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரமனை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 210 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்றவர்கள் நிறைய பேர் அரசு வேலையில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீதம் இந்த பள்ளி தேர்ச்சி பெற்றுவருகிறது. மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். தனியார் பள்ளிக்கு நிகராக சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்நிலையில் படிப்பு, விளையாட்டு ஆகியவற்றில் மட்டும் மாணவ-மாணவிகளின் கவனம் இருந்து விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பயிர் சாகுபடி மற்றும் தோட்டப் பயிர்கள் வளர்க்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இயற்கை ஆர்வலர்கள் கொடுத்த நாட்டு விதைகள் மூலம் பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை ஹரிதேவி, உதவி தலைமை ஆசிரியர் காமராஜூ மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவ- மாணவிகள் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.

காய்கறி தோட்டத்தில் சுரைக்காய், பீர்க்கங்காய், பரங்கிகாய், அவரைக்காய் மற்றும் மொச்சை, ஆமணக்கு, கீரை வகைகள் உள்ளிட்டவை இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது சுரைக்காய், பீர்க்கங்காய், பரங்கிகாய் உள்ளிட்டவை அதிகளவு காய்த்துள்ளது. பள்ளியில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் அனைத்தும் பள்ளி சத்துணவுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் சத்தான உணவை சாப்பிட்டு வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகளுடன், தேசிய பசுமை படை, சாரணர் இயக்கம், இளம் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றை சேர்ந்த மாணவ- மாணவிகளும் சேர்ந்து தினமும் குழுக்களாகப் பிரிந்து சென்று காய்கறி தோட்டத்தை பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 1978-ம் ஆண்டு சத்திரமனையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் தொலை தூரத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு பள்ளிக்கு வந்து, செல்ல ஆசிரியர்கள் சார்பில் ஆட்டோ வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அழிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்கவும், இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் காய்கறி தோட்டம் மாணவ-மாணவிகளால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் காய்கறி தோட்டத்தை பராமரித்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் தேசிய மருத்துவ மூலிகை தோட்ட வாரியம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை ஆகியவற்றின் சார்பில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் மாணவ-மாணவிகள் பராமரித்து வருகின்றனர் என்றனர். அரசு பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதை மாணவர்களின் பெற்றோர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News