செய்திகள்
பழைய குற்றாலம் நடைபாதையில் வெள்ளம் பாய்ந்தோடுவதை படத்தில் காணலாம்.

குற்றாலத்தில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: தென்காசி-அம்பை சாலையில் வெள்ளம்

Published On 2021-11-30 04:18 GMT   |   Update On 2021-11-30 04:18 GMT
தென்காசி புதிய பாலத்தில் இருந்து மத்தாளம்பாறை வரையிலும் சாலையில் வெள்ளம் ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
நெல்லை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. தொடர்மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று முன்தினம் கனமழையால் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் கொட்டியது. செம்மண் நிறத்தில் கொட்டிய தண்ணீரால் அருவிக்கரைகள் கடுமையான சேதம் அடைந்தன.

நேற்றும் வெள்ளம் குறையாமல் தண்ணீர் கொட்டியதால் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையில் தளக்கற்கள், தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தன. மலையில் இருந்து ராட்சத பாறாங்கற்களும் உருண்டு விழுந்தன.

இன்றும் 3-வது நாளாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மெயினருவி மட்டுமல்லாது பழைய குற்றாலம், ஐந்தருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் படிக்கட்டுகளில் வெள்ளம் ஓடியது. ஏற்கனவே குற்றாலம் தண்ணீர் சிற்றாறு கால்வாய் வழியாக சென்று சுமார்  300-க்கும் மேற்பட்ட குளங்களை நிரப்பிவிட்டது.

இந்நிலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் தென்காசியில் இருந்து அம்பை செல்லும் பிரதான சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனாலும் சற்று குறைந்த அளவில் தண்ணீர் சென்றதால் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்றது.

தென்காசி புதிய பாலத்தில் இருந்து மத்தாளம்பாறை வரையிலும் சாலையில் வெள்ளம் ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. சிற்றாறு கால்வாயில் எதிர்பாராத அளவிற்கு வெள்ளம் ஓடியது. அதே நேரத்தில் அருகன்குளம் கால்வாயிலும் குற்றாலம் அருவிகளில் இருந்து வந்த தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இதனால் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் அருகில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. கடும் வெள்ளம் காரணமாக மத்தாளம்பாறை பகுதியில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது.

அங்குள்ள நிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நெற்பயிர்கள் நடப்பட்டன. ஆனால் குற்றாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News