ஆன்மிகம்
லட்சுமி யோகம்

செல்வம் அருளும் லட்சுமி யோகம்

Published On 2019-07-12 07:01 GMT   |   Update On 2019-07-12 07:01 GMT
சுய ஜாதக ரீதியாக லட்சுமி யோகம் அமையப்பெற்றவர் பெரும் செல்வ நிலையை அடைந்து, அரசருக்கு சமமாக இருப்பார் என்பதை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் போன்ற வலிமையைப் பெற்று அமர்ந்துள்ள நிலையில், லக்னத்துக்கு ஒன்பதாவது வீட்டு அதிபதி ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் ஆகிய நிலை அடைந்து, லக்னத்துக்கு கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்திருப்பது லட்சுமி யோகம் ஆகும். சுய ஜாதக ரீதியாக, லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதும் லட்சுமி யோகத்தை ஏற்படுத்துகிறது.

செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி சம்பந்தப்பட்ட இந்த யோகம் சுக்கிரனின் வலிமையைக்கொண்டு தீர்மானம் செய்யப்படுகிறது. சுய ஜாதக ரீதியாக லட்சுமி யோகம் அமையப்பெற்றவர் பெரும் செல்வ நிலையை அடைந்து, அரசருக்கு சமமாக இருப்பார் என்பதை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், அனைவராலும் மதிக்கப்படத்தக்க வகையில் நற்குணங்கள் உடையவராகவும், தோற்றத்தில் அழகாகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பிருகு மகரிஷியின் மகன் அசுர குருவான சுக்கிரன். அதனால் அவருக்கு பார்கவன் என்ற பெயரும் உண்டு. பார்கவி என்ற மகாலட்சுமியும், சுக்கிரனும் ஒரே தாய், தந்தையருக்கு பிறந்தவர்கள் என்ற நிலையில் சுக்கிரன் மகாலட்சுமிக்கு உடன் பிறந்த சகோதரன் ஆகிறான். சுக்கிரனின் அதிதேவதை இந்தி ராணி, பிரத்யதி தேவதை இந்திரன் ஆவார்கள். சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற நாளான வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு சகல வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தங்கமும், வெள்ளியும் மகாலட்சுமிக்குப் பிரியமானவை ஆகும். மகாலட்சுமியின் அருள் என்பது கலியுகத்தில் அனைவருக்கும் அவசியம் என்பதை மகான்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின், ஒவ்வொரு அவதாரத்திலும், மகாலட்சுமியும் உடன் அவதாரம் செய்து அவருக்கு துணையாக வருகிறாள். லட்சுமி யோகத்தை, சுய ஜாதக ரீதியாக பெற்றவர்கள் அவர்கள் இருவரது அருளையும் பெறுகிறார்கள் என்பது ஜோதிட ரீதியான நம்பிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News