செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - எடப்பாடி பழனிசாமி

Published On 2020-01-09 08:16 GMT   |   Update On 2020-01-09 08:16 GMT
களியக்காவிளை சோதனை சாவடியில் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி, களியக்காவிளை சோதனை சாவடியில் பணியிலிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு உயிரிழந்தது குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

தமிழ்நாடு கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடி அமைத்து காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இச்சோதனை சாவடியில் நேற்று (8.1.2020) இரவு 8 மணி முதல் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் காயங்கள் ஏற்பட்டு, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடம் சென்று, காயமடைந்த வில்சனை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வில்சன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி அறிந்த தெற்கு மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.

மறைந்த வில்சனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். மேலும் அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப்பணி வழங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Tags:    

Similar News