செய்திகள்
பூக்கள்

மதுரையில் பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

Published On 2021-09-09 08:13 GMT   |   Update On 2021-09-09 08:13 GMT
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
மதுரை:

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை ஒட்டி மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. பூக்களின் விலையும் இரு மடங்கு விலை உயர்ந்துள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபடுவது மக்களின் பாரம்பரிய நடைமுறை ஆகும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. ஆனால் கோயில்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அவற்றை நீர்நிலைகளில் பாதுகாப்பாக கொண்டு கரைக்கவும் அரசு அதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளது.

நாளை விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரை மார்க்கெட்டுகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்துள்ளது. விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர். மேலும் எருக்கம் மாலை, அருகம்புல், அவல், பொரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்வதற்காக பூக்கள் வாங்கவும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பூக்களை வாங்குவதிலும் பொதுமக்கள் தங்கள் ஆர்வத்தை குறைத்துள்ளனர். ஆனாலும் தற்காலிக மார்க்கெட்டில் இட நெருக்கடி காரணமாக கூட்ட நெரிசல் காணப்பட்டது. முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மதுரை மல்லிகை என்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சி, முல்லை உள்ளிட்ட மலர்களும் 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. சம்பங்கி, சிவந்தி, மரிக்கொழுந்து பட்டர் ரோஸ், அரளி, அருகம்புல் மற்றும் உதிரி பூக்களின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி மலர் வணிகர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

இன்று முகூர்த்த நாள், நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி பூக்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக வழக்கமான இடத்தில் பூ மார்க்கெட் செயல்படுவதில் சிக்கல் இருந்து வருகிறது. தற்காலிக மார்க்கெட் என்பதாலும், இடம் போதுமான இல்லாததாலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது போல தெரிகிறது.

ஆனாலும் தற்போது பூக்கள் விற்பனையும், மக்களின் ஆர்வமும் குறைவாகவே உள்ளன. எனவே வழக்கமான வியாபாரம் நடைபெற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர மார்க்கெட்டை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போது தான் வியாபாரிகளுக்கும் மலர் விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் பாதுகாக்க முடியும்.

தற்போது ஓரளவுக்கு விலை கிடைத்தாலும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பாதிப்புகள் தான் அதிகமாக உள்ளன. எனவே அரசு மலர் வணிக விவசாயிகள், வியாபாரிகள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News