செய்திகள்
கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

Published On 2021-11-17 13:41 GMT   |   Update On 2021-11-17 13:41 GMT
கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
ராமபிரசாத்தின் நண்பருடைய மனைவிக்கு காஞ்சிபுரம் கல்வித் துறை அலுவலகத்தில் இருந்து ஒரு இன்டர்வியூ வந்திருந்தது.
இன்டர்வியூவில் கலந்து கொள்ளச் சென்ற அந்தப் பெண்மணிக்குத் துணையாக ராமபிரசாத்தின் மனைவி அங்கம்மாளும் சென்றிருந்தார்.

காஞ்சிபுரம் கல்வித்துறை அலுவலகத்துக்கு உரிய நேரத்தில் இருவரும் சென்று விட்டார்கள். இருந்தாலும், இன்டர்வியூ மாலை நாலரை மணிக்குத்தான் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர்தான் ‘நேரம் இருக்கிறதே... மகா பெரியவாளைத் தரிசிக்கலாம்’ என்று ஸ்ரீமடத்துக்கு வந்தார்கள் இருவரும். நண்பரின் மனைவி நாத்திகவாதி என்பதால், அவரை ஸ்ரீமடத்தின் வாசலில் திண்ணையிலேயே அமர வைத்து விட்டு அங்கம்மாள் மட்டும் உள்ளே சென்றார். அப்போது மகான் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? வராண்டா போன்ற ஓர் இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தியானத்தில் இருந்தார். சாதாரணமான தியானத்தை விட இது வித்தியாசமாகப் பட்டது அனைவருக்கும். சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு, கண்களை மூடி மகா பெரியவா தியானம் இருப்பதைப் பலரும் பார்த்தி ருக்கலாம். ஆனால், இந்த தியான முறை முற்றிலும் வேறுபட்டது.

அப்படி என்ன தியானம் என்கிறீர்களா?

வராண்டாவின் மத்தியில் சம்மண மிட்டு அமர்ந் திருந்த பெரியவா, அருகில் இருந்த பேழையில் இருந்து விபூதியை எடுத்தார். அதை உள்ளங்கையில் வைத்து நீர் விட்டுக் குழைத் துக் கொண்டார். நெற்றியிலும் கைகளிலும் இட்டுக் கொண் டார். இதென்ன அதிசயம்... விபூதியை இப்படித்தானே இடுவார்கள் என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள்.

இப்படி இட்டுக் கொண்ட பின் பதினைந்து நிமிட தியானம். கண்களைத் திறந்தார். காத்திருக்கிற பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், பெரியவாளின் செயல்பாடுகள் அப்படித் தெரியவில்லை. மீண்டும் விபூதிப் பேழையில் இருந்து எடுத்துக் கொண்டார். முன்பு போல் உள்ளங்கையில் வைத்துக் குழைத்தார். அதை நெற்றியில் இட்டுக் கொண்டார். ஏற்கெனவே இட்டுக் கொண்டிருந்த விபூதியைக் கலைக்கவில்லை. அழிக்கவில்லை. அதன் மேலேயே மீண்டும் இட்டுக் கொண்டார்.

அடுத்து பதினைந்து நிமிடம் தியானம். கண்களை மூடிய வண்ணம் காணப்பட்டார்.கால் மணி நேரம் போனது. கண்களைத் திறந்தார். மீண்டும் பழையபடி விபூதியைக் குழைத்துப் பூசிக் கொண்டார்.ஆக, மொத்தத்தில் ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தார் பெரியவா. எதற்காக விபூதியை இப்படிக் குழைத்துக் குழைத்துப் பூசிக் கொள்ள வேண்டும்... அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு தியானம் செய்ய வேண்டும்?இதற்கான பதில் எவருக்கும் புரியவில்லை. அங்கம்மாளும் யோசித்தார். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை.‘இவை எல்லாம் ஒரு விதமான தியானம். இதற்கான காரணங்களை ஆராய முற்படக் கூடாது’ என்று ஆன்மிக அன்பர் ஒருவர் பிற்காலத்தில் அங்கம்மாளிடம் சொல்லி இருக்கிறார்.



பெரியவாளின் இந்த தியானக் காட்சிகளை நேருக்கு நேராக சுமார் ஒண்ணேகால் மணி நேரத்துக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியம் அங்கம்மாளுக்குக் கிடைத்தது. தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தவாறே பெரியவாளின் இந்த தியானத்தை மனமுருகத் தரிசித்துக் கொண்டிருந்தார்.கூடி இருந்த பக்தர்கள் எவரும் அசையவில்லை. எல்லோரும் இந்தத் திருக்காட்சிகளையே கண் கொட்டாமல் பார்த்து தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.சுமார் ஒன்றரை மணி நேரம் போனது. மகான் அப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்தார். தன்னைத் தரிசிக்கக் கூடி இருக்கும் பக்தர்களைப் பார்த்தார்.

இத்தனை நேரம் கடந்தும் அங்கம்மாள் வரவில்லையே என்று யோசித்தார் வாசலிலேயே காத்திருந்த நாத்திகப் பெண்மணி. ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவர் வேறு வழியில்லாமல் ஸ்ரீமடத்தினுள் வந்து அங்கம்மாளுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டார். மகா பெரியவா தியானத்தில் இருக்கிறபோதே நாத்திகப் பெண்மணி வந்து அமர்ந்து விட்டார்.நாத்திகப் பெண்மணி ஸ்ரீமடத்தினுள் வந்து தன்னருகே அமர்ந்து கொண்டது அந்த வேளையில் அங்கம்மாளுக்குத் தெரியாது.காரணம், மகா பெரியவாளையே பரவசத்துடன் தரிசித்துக் கொண்டிருந்தார். தன் அருகே இந்தப் பெண்மணியைப் பார்த்ததும் வியப்பு. காரணம் கோயில், துறவி என்றாலே இந்தப் பெண்மணியின் குடும்பத்துக்கு வேப்பங்காயாகக் கசக்கும்.உள்ளே அமர்ந்து கொண்ட நாத்திகப் பெண்மணியும், தியானத்தில் இருக்கும் மகா பெரியவாளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.

முற்றம் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அங்கம்மாள் ஒரு கட்டத்தில் எழுந்தார். உடன் நாத்திகப் பெண்மணியும் எழுந்தார்.
பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார் அங்கம்மாள். அந்த மகான் இருக்கின்ற திசை பார்த்துக் கும்பிட்டார். பிறகு, வெளியே வந்தார்.அருகில் இருந்த ஒரு ஓட்டலில் உணவருந்தினார்கள். அப்படியே நேரம் மெல்ல மெல்ல ஓடியது.மூன்றரை மணி தாண்டியதும், இருவரும் கல்வித் துறை அலுவலகத்துக்கு வந்தார்கள்.சரியாக நாலரை மணிக்கு நாத்திகப் பெண்மணிக்கு அழைப்பு வந்தது. இன்டர்வியூ நடந்தது. சென்னைக்குத் திரும்பினார்கள்.

என்ன ஆச்சரியம் தெரியுமா?

இரண்டே நாட்களில் வேலையில் சேருமாறு அப்பாயின்ட்மெண்ட் லெட்டர் வந்தது நாத்திகப் பெண்மணிக்கு.
‘இந்தப் பணி கிடைப்பதற்கு மகா பெரியவா திருச்சந்நிதியில் அமர்ந்திருந்து, அவரது கடைக்கண் பார்வை விழுந்ததே காரணம்’ என்று நாத்திகப் பெண்மணியிடம் சொல்லி பூரித்துப் போனார் அங்கம்மாள்.நாத்திகம் பேசுபவராக இருந்தாலும், மகானின் கடைக் கண் பார்வை பட்டு விட் டால் போதும்... அதன் பின் சம்பந்தப் பட்ட நாத்திகரின் மனசுக் குள் ஏற்படு கிற மாற்றங்களை பல சம்பவங்கள் மூலம் பார்த்திருக்கிறோம்.அந்த வகையில் பக்தி என்கிற சிந்தனையே இல்லாத நாத்திகப் பெண்மணியைத் தன் சந்நிதிக்கு வரவழைக்கிறார் பெரியவா. எப்படி? இன்டர்வியூவைத் தாமதம் செய்து! இல்லை என்றால், இந்த நாத்திகப் பெண்மணி ஸ்ரீமடத்துக்குள் வருவாரா?அங்கம்மாளின் கணவர் ராமபிரசாத்துக்கு ஒரு கட்டத்தில் மீண்டும் உடல் நிலை மோசமாகிப் போனது. மருத்துவச் செலவுகளுக்கு செலவழித்து மாளவில்லை. சிகிச்சைக்காக அவ்வப்போது வெளியில் கடன் வேறு வாங்கினார் அங்கம்மாள்.வியாதியும் குணமாகவில்லை. வாங்கிய கடனும் அதிகமாகி விட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்தார் அங்கம்மாள்.

ஓரிரு நாட்கள் உட்கார்ந்து யோசித்தவருக்கு ஒரே எண்ணம்தான் பளிச்சிட்டது. அதாவது, இவரது குடும்பத்துக்கு சொந்தமான ஒரு வீடு திருவொற்றியூர் பகுதியில் மாட வீதியில் இருந்தது. அந்த வீட்டை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையில் கடனை அடைத்து விட்டுக் கணவரின் வைத்தியத்தையும் நன்றாகச் செய்யலாம் என்று தீர்மானித்தார். ‘சரி... அதற்கு வீட்டை விற்று விட வேண்டியதுதானே... இதில் என்ன சிக்கல்?’ என்று தோன்றுகிறதல்லவா? ஆம்! அந்த வீட்டை விற்பதில் ஒரு சிக்கல்தான்.
சுமார் 1 கிரவுண்டு வீடு அது. அதில் முக்கால் கிரவுண்டில் வீடு. மீதி வெறுமனே இருந்தது.

அப்போது இந்த இடத்தில் குடியிருந்தவர் - பழைய பேப்பர் வியாபாரி ஒருவர். பின்னால் காலியாக இருக்கும் முக்கால் கிரவுண்ட் இடம் அவரது வியாபாரத்துக்குத் தோதானதாக இருந்தது. அதாவது, பழைய பேப்பர் மற்றும் வேஸ்ட் அயிட்டங்களை அங்கே மலையாகச் சேகரித்து வைத்திருந்தார். இந்த இடத்தை வாங்கலாம் என்று வீடு பார்க்க வந்தவர்களை ஏதேனும் காரணம் சொல்லி, அந்த இடத்தை விற்க விடாமல் செய்தார் அந்தப் பழைய பேப்பர் வியாபாரி. காரணம், இந்த இடம் விற்கப்பட்டு விட்டால், அடுத்து உடனே காலி செய்ய வேண்டும். இந்த அளவுக்கு வசதியான இடம் இதே திருவொற்றியூரில் பிரதான இடத்தில் கிடைக்குமா என்கிற சந்தேகம் அவருக்கு.

இந்த இடத்தை எவரும் வாங்க விடாமல் வருகிறவர்களிடம் அந்தப் பழைய பேப்பர் வியாபாரி சொன்ன காரணம்தான் - அங்கம்மாளைத் திடுக்கிட வைத்தது. ‘இந்த வீட்டுல பேய் இருக்குது...’இது ஒரு காரணம். இதுபோல் இன்னும் பல எதிர்மறையான காரணங்களை வீட்டை வாங்க வருகிறவர்களிடம் மாற்றி மாற்றிச் சொல்லி வந்து இருக்கிறார்.‘என்னடாது... கணவர் வைத்தியச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது. கடன் வேறு நிறைய வாங்கி விட்டோம். அவற்றை அடைக்க வேண்டும். ஆனால், வீட்டை விற்க விடாமல் இப்படி அழிச்சாட்டியம் பண்ணுகிறாரே... இவரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லையே’ என்று கலக்கத்துடன் யோசித்தார் அங்கம்மாள்.ஒரே தீர்வு - மகா பெரியவாளிடம் சென்று பிரார்த்திப்பதுதான் என்று முடிவெடுத்தார். ‘அவரது திருச்சந்நிதிக்குப் போனால், எத்தகைய கஷ்டமும் பனி போல் விலகி விடும்’ என்று காஞ்சிபுரம் செல்ல முடிவெடுத்தார் அங்கம்மாள். காஞ்சிக்கு பஸ் ஏறினார். வியாபாரியின் பிடியில் இருந்து திருவொற்றியூர் வீட்டை மீட்டாரா?
Tags:    

Similar News