ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருவடி

ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதர் திருவடியை இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம்

Published On 2021-10-16 07:18 GMT   |   Update On 2021-10-16 07:18 GMT
ஒரு முறை தைலம் பூசினால் அது உலர்வதற்கு சுமார் 1 மண்டல காலம் (48 நாட்கள்) வரை ஆகும். தைலக்காப்பு உலர்ந்தபின் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மூலவர் ரெங்கநாதர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இதனால், மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர்.

இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பெருமாள் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர். இவ்வாறு தைலக்காப்பிடும் நாட்களில் பெருமாளை அலங்கரித்திருக்கும் வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு திருவடி தொடங்கி திருமுடிவரை தைலம் பூசப்படும். தைலம் பூசுவதற்காக பெருமாளின் மீதிருக்கும் வஸ்திரம் மற்றும் நகைகள் அகற்றப்பட்டுவிடுவதால் பெருமாளின் மார்புக்குக் கீழே திருவடி வரையுள்ள உள்ள பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்படும்.

ஒரு முறை தைலம் பூசினால் அது உலர்வதற்கு சுமார் 1 மண்டல காலம் (48 நாட்கள்) வரை ஆகும். தைலக்காப்பு உலர்ந்தபின் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும். இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தன.

பொதுவாக புரட்டாசி மாதங்களில் தைலகாப்பு நடைபெறுவதால் பெருமாளின் திருவடியை பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்படும். ஆனால், இந்தாண்டு கடந்த 8-ந்தேதியுடன் தைலகாப்பு நிறைவடைந்ததையொட்டி புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று(சனிக்கிழமை) முதல் பக்தர்கள் மூலவர் ரெங்கநாதர் திருவடியை தரிசிக்கலாம். மேலும் அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வரை ரெங்கநாதரை முழு அலங்காரத்துடன் திருவடியை தரிசிக்கலாம் என கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News