செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் குடும்பங்களின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது- பிரதமர் மோடி

Published On 2021-04-20 16:34 GMT   |   Update On 2021-04-20 16:34 GMT
கொரோனா பாதிப்புகளால் தங்களது அன்புக்குரியோரை இழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் நாள்தோறும் 2.75 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு இன்று உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ளது. கொரோனாவின் தற்போதைய பாதிப்பிலிருந்து நம்மால் மீள முடியும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் துக்கத்தில் நான் பங்கெடுக்கிறேன். மக்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததை விட தற்போது மருந்து உற்பத்தி உயர்ந்துள்ளது. மருந்து உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். உலகிலேயே நமது நாட்டில் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்கிறது.

இதுவரை 12 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏழைகள், நடுத்தர மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க தொடர்ந்து பாடுபடுவோம். பொருளாதாரம் பாதிக்கப்படாமல் உயிர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம். புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போதுள்ள இடங்களிலேயே இருக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் முதல் வெண்டிலேட்டவர் வரை கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தியில் 50% மாநிலங்களுக்கு வழங்கப்படும். நாம் கட்டுப்படுவதன் மூலம் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்துவதன் மூலம் பொதுமுடக்கம் விதிப்பதைத் தடுக்கலாம். கொரோனா பொதுமுடக்கத்தை கடைசி ஆயுதமாகவே மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News