செய்திகள்
தலைமை செயலாளர் இறையன்பு

ஆடம்பர உணவுகள் வேண்டாம்- மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

Published On 2021-06-10 10:34 GMT   |   Update On 2021-06-10 10:34 GMT
கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும்போது அதிகாரிகள் ஆடம்பரமான உணவு வகைகளை ஏற்பாடு செய்ய வேண்டாம்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 7-ந் தேதி பதவியேற்றது. இதையடுத்து ஜ.ஏ.எஸ் அதிகாரி இறையன்புவை தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

தற்போது கொரோனா காலம் என்பதால் தலைமை செயலாளராக பதவியேற்றதில் இருந்து இவர் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதவிர அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உயரதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.



அப்போது அங்கு எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத்துறையினரிடம் கேட்டறிந்து கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தி அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான் தற்போது மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அந்த சமயத்தில் அதிகாரிகள் எனக்காக சிறப்பு சாப்பாடுகளை ஏற்பாடு செய்வதாக தெரிகிறது.

அந்த மாதிரியான சாப்பாடுகள் எதுவும் தனக்கு வேண்டாம்.

நான் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும்போது அதிகாரிகள் ஆடம்பரமான உணவு வகைகளை ஏற்பாடு செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக காலை மற்றும் இரவு நேரங்களில் எளிய உணவும், மதிய நேரத்தில் 2 காய்கறிகளுடன் கூடிய சைவ உணவுகள் இருந்தால் போதும்.

இவ்வாறு அந்த கடிதம் மூலம் கலெக்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News