செய்திகள்
நாராயணசாமி

புதுவை மழை சேதத்தை மத்திய குழு முழுமையாக ஆய்வு செய்யவில்லை- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2021-11-27 04:25 GMT   |   Update On 2021-11-27 06:54 GMT
ரங்கசாமி பா.ஜனதாவிடம் சரணாகதி அடைய கூடாது. மின் துறையை தனியார் மயமாக்க அனுமதிக்க கூடாது. சட்டப்பேரவையில் மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய குழு புதுவையில் முழுமையாக மழை சேதத்தை ஆய்வு செய்யவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி நிவாரணமாக ரூ. 300 கோடி கேட்டுள்ளார். ஆனால், இதுவரை மத்திய அரசு மவுனமாகவே உள்ளது.

அதேநேரத்தில் அதிகாரிகள் ரூ.20 கோடி மட்டுமே நிவாரணம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி, தலைமைச் செயலர் அஸ்வினி குமாரை மாற்றக்கோரி மத்திய அரசிடம் பேசியுள்ளார். கடிதமும் அனுப்பி உள்ளார்.

 


ஆனால், இதுவரை தலைமைச்செயலரை மத்திய அரசு மாற்றவில்லை. எங்களுக்கு தொல்லை தந்தது போல் தற்போது முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய அரசு தொல்லை தருகிறது.

புதுவை மேல் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.இதன் மூலம் மத்திய அரசு புதுவை ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இல்லை என்பது தெளிவாகிறது. மக்களை ஏமாற்றி பா.ஜனதா ஆட்சியில் அமர்ந்துள்ளதும் புதுவையை பா.ஜ.க. வஞ்சிப்பதும் உறுதியாகிறது.

ரங்கசாமி பா.ஜனதாவிடம் சரணாகதி அடைய கூடாது. மின் துறையை தனியார் மயமாக்க அனுமதிக்க கூடாது. சட்டப்பேரவையில் மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Tags:    

Similar News