செய்திகள்
கைதான ஷெரின்

கோவையில் ரூ.10 கோடி மோசடி செய்த கேரள ஆசாமி கைது

Published On 2020-10-14 05:00 GMT   |   Update On 2020-10-14 05:00 GMT
முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.10 கோடி வசூலித்து மோசடி செய்த கேரள ஆசாமி கைது செய்யப்பட்டார்.
கோவை:

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஷெரின் (வயது 37). இவர் சரவணம்பட்டி பகுதியில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தங்களது நிறுவனத்தில் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்தால், அந்த பணத்தை தங்கம், வைர நகை வியாபாரத்தில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பணத்தை வாரந்தோறும் தவணை முறையிலும் செலுத்தலாம் என்று கூறி பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டார். இதனை நம்பிய சிலர் சுமார் 25 வாரங்கள் ரூ.1600 வீதம் செலுத்தியுள்ளனர். இதேபோல 1000-க்கும் மேலானவர்களிடம் ஷெரின் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கியும், கட்டிய பணத்தையும் திரும்பி தராததால் ஏமாற்றம் அடைந்த காந்திபுரத்தை சேர்ந்த சேவியர் என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதில், ஷெரின் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்ததாகவும், ஆனால் ரூ.11 ஆயிரத்தை மட்டும் தந்துவிட்டு மீதி பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும், கட்டிய பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறி இருந்தார்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன் உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஷெரின் இதுபோன்று ஏராளமானவர்களிடம் ரூ.10 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதேபோல் பெங்களூரு மற்றும் மும்பையிலும் தன்னுடைய கிளை நிறுவனங்களை ஷெரின் நடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த ஷெரினை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழக-கேரள எல்லைப்பகுதியான வாளையார் பகுதியில் ஷெரின் காரில் செல்லும்போது, போலீசார் மடக்கிப்பிடித்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மோசடி தொடர்பாக அவருடைய மனைவி ரம்யா, கூட்டாளிகள் ஷைனேஷ், ராய், பைஜூமன் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News