செய்திகள்
மழை

கோவையில் தென்மேற்கு பருவமழை குறைந்தது- அதிகபட்சமாக நீலகிரியில் 1,057 மி.மீ. மழை பதிவு

Published On 2021-09-24 06:12 GMT   |   Update On 2021-09-24 06:12 GMT
கோவை மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. தமிழக அளவில் மிகவும் குறைவாக 50 சதவீதம் மட்டுமே மழை பெய்துள்ளது.
கோவை:

தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்படி தற்போது பருவமழை பெய்து வருகிறது. நடப்பாண்டில் கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சராசரி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. 5 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதல் மழை பெய்யும் என கணிக்கப்பட்டது.

ஆனால் கோவை மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. தமிழக அளவில் மிகவும் குறைவாக 50 சதவீதம் மட்டுமே மழை பெய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கோவை மாவட்டத்தில் 42.8 மி.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 15 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

ஜூலை மாதத்தில் 68.5 மி.மீ. மழைக்கு பதிலாக 30.5மி.மீ. மழையும், ஆகஸ்டு மாதத்தில் 30.7 மி.மீ. மழைக்கு பதிலாக சற்று கூடுதலாக 38.5 மி.மீ. மழை பெய்தது. செப்டம்பர் மாதம் 68 மி.மீ. மழை பெய்யும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 18 நாட்களில் 16 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

பருவமழை முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையிலும் மாவட்டத்தில் வரும் நாட்களில் பெரிய அளவில் மழைக்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும் கோவையில் தென்மேற்கு பருவமழை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறும்போது:-

தென்மேற்கு பருவமழையின் காற்றின் திசை மாறியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் குறைவான மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 210 மி.மீ. பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 15-ந் தேதி வரை 100 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

தமிழக அளவில் மிகவும் மழை குறைவாக பெய்துள்ள மாவட்டமாக கோவை உள்ளது. கன்னியாகுமரியில் 302 மி.மீ., கிருஷ்ணகிரியில் 297 மி.மீ., திருவாரூரில் 235 மி.மீ. மழை என குறைவான மழை பதிவாகியுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தர்மபுரி, மதுரை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 1,057 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் தற்போது மழை இல்லை. இதனால் கோவையில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது.வெப்பசலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்கிறது. மேலும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதத்தை தாண்டி நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News