செய்திகள்
கோலியனூரில் வேட்பாளரின் பிரசார வாகனங்களை தயார் செய்யும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.

சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள வேட்பாளர்களின் வாகனங்களை தயார் செய்யும் பணி

Published On 2021-03-07 01:25 GMT   |   Update On 2021-03-07 01:25 GMT
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி நடைபெறுகிறது.
விழுப்புரம்:

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான கடந்த மாதம் 26-ந் தேதி மாலையில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியான முறையிலும் நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளிலும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தற்போது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை ஒதுக்கீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்றோ, நாளையோ வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வருகிற 10-ந் தேதி வெளியிடப்படுகிறது. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதும் அவர்கள் உடனடியாக வேட்பு மனுதாக்கல் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். அப்பணியை முடித்து விட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்குவார்கள். பிரசாரம் செய்ய கிட்டத்தட்ட 20 முதல் 25 நாட்களே கால அவகாசம் உள்ளது என்பதால் பிரசார வாகனங்களை தயார் செய்யும் பணியில் முன்கூட்டியே ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தவுடன் 3 வார காலம் கொளுத்தும் வெயிலில் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடத்தில் வாக்குகளை சேகரிக்க உள்ளனர். இதையொட்டி வேட்பாளர்களின் பிரசார வாகனங்களை தயார் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள ஒரு ஒர்க்க்ஷாப்பில் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த வாகனங்களை தயார் செய்யும் பணியில் ஒர்க்க்ஷாப் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் விழுப்புரம் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படாததால் வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்கான பிரசார வாகனங்களை வெல்டிங் மூலம் பழுதுநீக்கம் செய்து பெயிண்ட் அடிக்கப்பட்டு வாகனத்தை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
Tags:    

Similar News