செய்திகள்
கொரோனா தடுப்பூசி

வேதாரண்யம் பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை

Published On 2021-04-16 12:44 GMT   |   Update On 2021-04-16 12:44 GMT
கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேதாரண்யம்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க கோவிசீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு ஊசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் டோஸ் அளவிலான தடுப்பு மருந்துகள் பயனாளிகளுக்கு போட முடியாதபடி சுகாதாரத் துறையினர் சென்னைக்கு அதிக அளவில் தேவை என்று கூறி அனைத்து கிராம மற்றும் நகர்புற ஆஸ்பத்திரிகளில் உள்ள தடுப்பு மருந்துகளை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பயனாளிகளுக்கு போதுமான அளவில் தடுப்பூசி போடுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று பயனாளிகள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள சென்றால் ஊசிமருந்து கைவசம் இல்லை என்றும், இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் வந்து விடும் என்றும் கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். தற்போது இரண்டாவது முறையாக தடுப்பு ஊசிமட்டுமே இப்போது உள்ளது என்றும் கூறுகின்றனர்.

இது தவிர பணியில் உள்ள சுகாதாரத்துறை பிரிவைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களில் பெரும்பாலோனோர் சென்னை உட்பட பெரு நகரங்களுக்கு தேவை என்பதால் அழைத்து செல்லப்பட்டு விட்ட நிலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையில் தடுப்பு ஊசி போட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.

இவர்களுக்கு முதலில் தடுப்பு ஊசி இல்லை என மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வர வைக்கப்பட்டு 200 நபர்களுக்கு போடப்பட்டது. பின்பு தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி டோக்கன் வழங்கி நாளை வாருங்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஊசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதனால் சிறிது நேரம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News