செய்திகள்
பிரதமர் மோடி

மேற்குவங்காளத்தில் பிரதமர் மோடி மேலும் 10 இடங்களில் பிரசாரம்

Published On 2021-04-05 07:03 GMT   |   Update On 2021-04-05 07:03 GMT
மேற்குவங்காளத்தில் பிரதமர் மோடி 10 கூட்டங்களில் பிரசாரம் செய்ய இருப்பதாக மேற்கு வங்க மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்தார்.

புதுடெல்லி:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. நாளை 3-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இது தவிர இன்னும் 5 கட்ட தேர்தல் இருக்கின்றன. இங்கு ஆளும் கட்சியாக மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் இருக்கின்ற நிலையில், ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற தீவிரத்துடன் பாரதிய ஜனதா களத்தில் உள்ளது.

இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் மேற்கு வங்காளத்தில் அதிமுக்கிய கவனம் செலுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி 5 மாநிலங்களையும் சேர்த்து 25 இடங்களில் பிரசாரம் செய்துள்ளார். மேற்கு வங்காளத்தில் மட்டும் 9 பிரசாரங்களை இதுவரை முடித்துள்ளார். அந்த மாநிலத்தில் 20 பிரசார கூட்டம் வரை பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு செய்திருந்தார். 9 கூட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மேலும் 10 கூட்டங்களில் அவர் பிரசாரம் செய்ய இருப்பதாக மேற்கு வங்க மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்தார்.

அங்கு இறுதி கட்ட தேர்தல் 29-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் 27-ந் தேதியுடன் ஓய்கிறது. அதுவரை பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதேபோல பாரதிய ஜனதா தலைவர்களும் தொடர்ந்து முகாமிட்டு பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

Tags:    

Similar News