செய்திகள்
திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிபாய்ந்து வந்த காளையை திமிலை பிடித்து அடக்கு வீரர்.

திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டில் திமிறி வந்த காளைகள்- திமிலை பிடித்து அடக்கி வீரர்கள் உற்சாகம்

Published On 2021-02-21 09:54 GMT   |   Update On 2021-02-21 09:54 GMT
தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி புனித அந்தோணியார் பேராலய பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது.

இதில் கலந்து கொள்ள 600 காளைகள் மற்றும் 400 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் காளைகள் கொண்டு வரப்பட்டன. காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பார்வையாளர் பகுதிக்குள் காளைகள் சென்று விடாதபடிக்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. காளைகள், வீரர்கள் அடிபடாமல் இருக்க களத்தில் தேங்காய் நார்கள் போடப்பட்டிருந்தன. மேலும் ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர், கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

போட்டியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கலெக்டர் உறுதிமொழி வாசிக்க வீரர்கள் ஏற்று கொண்டனர். மொத்தம் 15 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.

இதையடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் துள்ளிகுதித்து சீறிப்பாய்ந்தன. களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. வீரர்களும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜல்லிகட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Tags:    

Similar News