செய்திகள்
கோப்புபடம்.

அமராவதி அணை தண்ணீர் திறப்பால் நெல் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

Published On 2021-09-25 08:52 GMT   |   Update On 2021-09-25 08:52 GMT
அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உடுமலை:

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக் கொண்டு உடுமலை அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும்,புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதம் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம் அடைந்தது. இதையடுத்து ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்ததுடன் தற்போது வரையிலும் அணை முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

அத்துடன் அவ்வப்போது மழைப்பொழிவு ஏற்பட்டு வந்ததாலும் அமராவதி அணையின் நீர் இருப்பு நிலையாக இருந்து வருகிறது. இதையடுத்து முதல்போக நெல் சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

அதன்பேரில் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் நெல் நாற்றங்கால் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அணையிலும் தேவையான அளவு நீர் இருப்பு உள்ளதால் நெற்பயிருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. 

இதனால் கூடுதல் விளைச்சல் ஈட்டலாம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். தற்போதைய நிலவரப்படி அணையில் 87.76அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.   
Tags:    

Similar News