ஆன்மிகம்
வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சோலைமலை முருகனுக்கு பாலாபிஷேகம்

Published On 2019-11-26 05:18 GMT   |   Update On 2019-11-26 05:18 GMT
கார்த்திகை மாத சோமவாரவிழாவையொட்டி சோலைமலை முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவில். இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை மாத திருவிழாவும் சிறப்புடையதாகும். இதில் கடந்த 18-ந் தேதி முதல் சோமவார விழா நடந்தது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது சோமவார விழாவில் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு குடம், குடமாக பாலாபிஷேகமும், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, தேன், புஷ்பம், தீர்த்தம், தயிர், திரவியம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சரவிளக்கு தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.

தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி மூலவர் சன்னதி வெளிபிரகாரத்தை சுற்றி வந்து இருப்பிடம் சேர்ந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 2-ந் தேதி 3-ம் சோமவாரமும், 9-ந்தேதி 4-ம் சோமவாரமும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கார்த்திகை தீப திருவிழா 10-ந் தேதி மாலையில் 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 16-ந் தேதி 5-ம் சோமவார நிறைவு விழா நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி புறப்பாடு நடைபெறும். அன்று பிற்பகல் 3 மணிக்கு 1008 சங்காபிஷேகமும் நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News