செய்திகள்
டெங்கு காய்ச்சல்

மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி - தென்காசியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு

Published On 2021-02-20 17:48 GMT   |   Update On 2021-02-20 17:48 GMT
திசையன்விளையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள். தென்காசியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை நல்லதம்பி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி பிந்து. இந்த தம்பதியின் மகள் ஹன்சிகா (வயது 9). இந்த நிலையில் பிந்து தனது கணவர் ரமேசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பிந்துவுடன் சிறுமி ஹன்சிகா இருந்து வந்தாள்.

கடந்த 17-ந்தேதி ஹன்சிகாவுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவளை திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவளை மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஹன்சிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிந்து அளித்த புகாரின் பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி பகுதியில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஒரு சிறுமி நெல்லையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டெங்கு காய்ச்சலால் இறந்தாள்.

இந்த நிலையில் தென்காசி நடுப்பேட்டை தெரு, கீழப்புலியூர் புலிக்குட்டி விநாயகர் கோவில் தெரு, மலையான் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 10 முதல் 12 வயது உள்ள 2 சிறுவர்கள், ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று மேலகரம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் சிவா, கைலாசம், மாரிமுத்து, மகேஸ்வரன் ஆகியோர் தென்காசியில் உள்ள 33 வார்டுகளிலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே நகராட்சி ஆணையாளர் பாரிஜான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்காசியில் தற்காலிக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கும் வகையில் அமைந்துள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உபயோகமற்ற டயர்கள், தேவையற்ற உரல்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீர் தேங்கி உள்ள பாத்திரங்களில் கொசுக்கள் நுழையாத வகையில் மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ளவர்களோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் சுய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News