செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

கொடநாடு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Published On 2021-10-01 12:31 GMT   |   Update On 2021-10-01 12:31 GMT
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து பொருள்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்டம் ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் 8 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், மாவட்ட முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதிய அளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. நீலகிரி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.



அதில், "இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் அழைத்து விசாரிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று 4 வார காலத்துக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News