செய்திகள்
மு.க.அழகிரி

மு.க.அழகிரி பின்னால் யாரும் போக மாட்டார்கள்- அரசியல் நிபுணர்கள் கணிப்பு

Published On 2020-11-19 07:45 GMT   |   Update On 2020-11-19 07:45 GMT
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் மு.க.அழகிரி பின்னால் யாரும் போக மாட்டார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சென்னை:

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க.அழகிரி தனிக்கட்சியை தொடங்கப் போகிறார் என்றும், பா.ஜனதாவில் இணைய போகிறார் என்றும் மாறுபட்ட தகவல்கள் வெளியானது. இதனை அழகிரி மறுத்தார்.

அழகிரி பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் கூறி அழைப்பு விடுத்தார். ஆனால் முருகன் வெளியிட்டிருப்பது அவரது சொந்த கருத்து என்றும், ஜனவரி மாதத்தில்தான் எனது முடிவை அறிவிப்பேன் என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்கினால், தி.மு.க.வினர் யாரும் அவர் பின்னால் செல்ல மாட்டார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இது தொடர்பாக அரசியல் விமர்சகரான தராசு ஷியாம் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தி.மு.க.வினர் யாரும் அழகிரி பக்கம் செல்வதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

அதே நேரத்தில் மு.க.அழகிரிக்கு மாநில அளவில் ஆதரவாளர்களும் கிடையாது. இதனால் அழகிரி எடுக்கும் முடிவால் தி.மு.க. ஓட்டுகள் சிதறுவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

இன்னொரு அரசியல் விமர்சகர் கூறும்போது, மு.க.ஸ்டாலின், தி.மு.க.வில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நபராக மாறி விட்டார். எனவே அழகிரி எடுக்கும் முடிவுகள் தி.மு.க.வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்று கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News