செய்திகள்
தென்னக ரெயில்வே

மதுரைக்கு ரெயில் மூலம் ஆக்சிஜன் கொண்டுவர ஏற்பாடு

Published On 2021-05-12 09:49 GMT   |   Update On 2021-05-12 16:54 GMT
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்து வருகிறது.

மதுரை:

மதுரையில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே இங்கு பிராண வாயுவான ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் வடமாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் வகையில் சரக்கு ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்து வருகிறது.

 



இதற்காக திருவள்ளூரில் இருந்து 2 கிரையோஜனிக் காலி டேங்கர்கள் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிற்கு அனுப்பப்பட இருக்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 7 பிளாட் வேகன்கள் இணைக்கப்படும்.

அதில் 2 டேங்கர் லாரிகள் ஏற்றப்பட்டு, இந்த ரெயில் வருகிற செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ரூர்கேலாவிற்கு புறப்படுகிறது. இந்த டேங்கர்களில் திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு மீண்டும் சென்னை, திருவள்ளூர் வந்து சேரும்.

இந்த ரெயில் போகும் போதும் வரும்போதும் எல்லா ரெயில் நிலையங்களிலும் பச்சை சிக்னல் பெற்று எங்கும் நிற்காமல் விரைவாக செல்லும் வகையில் கிரீன் காரிடர் என பெயரிடப்பட்ட வழித் தடத்தில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில்களின் இயக்கம் டெல்லி ரெயில்வே வாரிய அளவில் கண்காணிக்கப்படுகிறது.

டேங்கர் லாரிகள் “ரோல் ஆன் ரோல் ஆப்” என்ற திட்டத்தின் கீழ் இயக்கப்படுவதால், ரெயில், திருவள்ளூர் வந்து சேர்ந்தவுடன், டேங்கர் லாரிகள் உடனடியாக தேவைப்படும் உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த ரெயில் வியாசர்பாடி திருவெற்றியூர் கூடூர், பிட்ரகுண்டா, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் வழியாக 168.5 கிலோமீட்டர் பயணிக்க உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ ஆக்சிசன் உடனடியாக தமிழகத்தில் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News