செய்திகள்
இமயமலை பனிப்பாறைகளை படத்தில் காணலாம்.

இரு மடங்கு வேகத்தில் உருகும் இமயமலை பனிப்பாறைகள்

Published On 2021-02-08 02:04 GMT   |   Update On 2021-02-08 02:04 GMT
உலக வெப்பமயமாதல் என்ற அநியாயம் ஓசையின்றி அரங்கேறி வருவதால் இமயமலை பனிப்பாறைகள் வேகமாக, அதுவும் இரு மடங்கு வேகமாக உருகுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி :

இயற்கையின் அருட்கொடை, இமயமலை என்று சொல்லலாம். இந்த இமயமலையில் ஏராளமான பனிப்பாறைகள் இருக்கின்றன. இந்த பனிப்பாறைகள்தான் கோடானக்கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றன.

ஆனால் உலக வெப்பமயமாதல் என்ற அநியாயம் ஓசையின்றி அரங்கேறி வருவதால் இந்த பனிப்பாறைகள் வேகமாக, அதுவும் இரு மடங்கு வேகமாக உருகத்தொடங்கி இருக்கின்றன.

அதுவும் இந்த 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒரு கட்டத்தில் பல ஆசிய நாடுகளின் குடிநீர் தேவைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அபாய மணியை 2019-ல் வெளியான ஒரு ஆய்வு அறிக்கை அடித்துள்ளது.

இந்த ஆய்வு சும்மா, மேம்போக்காக நடந்து விடவில்லை.

இந்தியா, சீனா, நேபாளம், பூடான் என பல நாடுகளில் 40 ஆண்டு காலமாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் நடந்துள்ளது. இமயமலையில் மேற்கில் இருந்து கிழக்கு வரை 2 ஆயிரம் கி.மீ. தொலைவில், ஏறத்தாழ 650 பனிப்பாறைகளின் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களின் படங்களைக்கொண்டு, 20-ம் நூற்றாண்டில் இமயமலை பனிப்பாறைகளின் நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் படங்களை, ஆராய்ச்சியாளர்கள் 2000-ம் ஆண்டுக்கு பிந்தைய அதிநவீன செயற்கைக்கோள்களில் இருந்து, ஒளியியல் தரவுகளுடன் ஒப்பிட்டுள்ளனர். இந்த ஒப்பீட்டில் இமயமலை பனிப்பாறைகளின் உயரம் குறைந்திருப்பது நேரடியாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள கசப்பான உண்மை, இமயமலை பாறைகளை பருவநிலை மாற்றம் காலி செய்து வருகிறது என்பதுதான்.

‘சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற பத்திரிகையில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ஆய்வு அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள் இவைதான்-

* இமயமலை பனிப்பாறைகள் 2000-ம் ஆண்டில் இருந்து சுமார் அரை அடி அளவுக்கு இழந்து வருகின்றன. இது 1975 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான உருகும் அளவை விட இரு மடங்கு ஆகும். இந்த கால இடைவெளியில் இமயமலை பனிப்பாறைகள் எவ்வளவு வேகமாக உருகுகின்றன என்பதற்கான தெளிவான படம் இது என்கிறார், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரும், ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான ஜோசுவா மாரர்.

* கடந்த 40 ஆண்டுகளில் இந்த பனிப்பாறைகள், கால் பகுதியை இழந்து விட்டன.

* பனிப்பாறைகள் உருகுவது சீராக நடைபெற்று வருகிறது. இதற்கு முதன்மையான காரணம், வெப்ப நிலை உயர்ந்து வருவதுதான். வெப்ப நிலை இடத்துக்கு இடம் மாறுபடும். ஆனால் 2000-ம் ஆண்டில் இருந்து 2016 வரை, வெப்ப நிலையானது 1975 முதல் 2000 வரையில் இருந்ததை விட சராசரியாக ஒரு செல்சியஸ் அதிகமாக இருந்தது.

* 1975-2000 கால கட்டத்தில், இமயமலை பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கால் மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது. 2000-ம் ஆண்டில் இருந்து இது ஆண்டுக்கு அரை மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது.

ஆசிய நாடுகள் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை, உயிரிகழிவுகளை அதிகளவில் எரிக்கின்றன. இதனால் ஏற்படுகிற வெப்பம், மேலே செல்கிறது. அவற்றின் பெரும்பகுதி இறுதியில் பனிப்பாறை பரப்பு-களில் இறங்குகிறது. அங்கு அது சூரிய சக்தியை உறிஞ்சி உருகுவதை விரைவுபடுத்துகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

எனவே இப்படி ஆசிய நாடுகளில் புதைவடிவ எரிபொருட்களையும், உயிரிகழிவுகளையும் எரிக்க எரிக்க, அது இமயமலை பனிப்பாறைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக கோடானக்கோடி மக்களுக்கு குடிநீர் கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும் என்ற அபாய மணியை ஒலிக்காமல் இருக்க முடியவில்லை.
Tags:    

Similar News