உள்ளூர் செய்திகள்
பா.ஜனதா மாவட்ட செயலாளரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

பா.ஜனதா மாவட்ட செயலாளரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு- பெண் உள்பட 2 பேரை போலீஸ் தேடுகிறது

Published On 2022-04-15 10:02 GMT   |   Update On 2022-04-15 10:02 GMT
மதுரவாயலில் பா.ஜனதா மாவட்ட செயலாளரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவத்தில் காருக்கு தீ வைத்த பெண் உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.
போரூர்:

மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (45) இவர் பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்த பெண் மற்றும் ஆண் இருவரும் சேர்ந்து சதிஷ்குமார் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

நேற்று கோயம்பேட்டில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பா.ஜனதாவினர்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இந்த விழாவில் சதீஷ்குமார் பங்கேற்று விட்டு திரும்பி இருந்தார். இந்த நிலையில் அவரது காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேட்டில் நடந்த மோதல் காரணமாக காருக்கு தீ வைக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

சதீஷ்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தீ வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News