செய்திகள்
விஜய் மல்லையா

விஜய் மல்லையாவின் ரூ.5,800 கோடி பங்குகள் விற்பனை - மத்திய அமலாக்க இயக்குனரகம் தகவல்

Published On 2021-06-23 20:23 GMT   |   Update On 2021-06-23 20:23 GMT
விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட ரூ.9,041 கோடி மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

தொழில் அதிபர் விஜய் மல்லையா, நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து பல்லாயிரம் கோடி கடன்களைப் பெற்று விட்டு, வட்டியுடன் திரும்பச்செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார்.

இதே போன்று வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினர். நிரவ் மோடி இங்கிலாந்தில் உள்ளார். மெகுல் சோக்சி, டொமினிகா சிறையில் உள்ளார்.

இவர்களை நாடு கடத்திக்கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.



இதனால் இந்த வங்கிகள் கோடிக்கணக்கில் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்தின் பங்குகளை சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் கைப்பற்றியது.

இந்த நிலையில், கடன்கள் மீட்பு தீர்ப்பாயம், இந்திய ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு சார்பாக, யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்தின் ரூ.5,800 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று விட்டது.

இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பில் 40 சதவீதம் பங்கு விற்பனை மூலம் மீட்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மும்பையில் உள்ள சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க, நாங்கள் கைப்பற்றிய ரூ.6,600 கோடி மதிப்பிலான பங்குகளை இந்திய ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்புக்கு மாற்றினோம். அதைத் தொடர்ந்து அந்த பங்குகளை கடன்கள் மீட்பு தீர்ப்பாயம் விற்றுள்ளது.

விஜய் மல்லையாவும், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் தங்கள் நிறுவனங்கள் மூலம் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி இந்த இரு வங்கி மோசடி வழக்குகளில் ரூ.18 ஆயிரத்து 170 கோடியே 2 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே விஜய் மல்லையா,நிரவ் மோடி, மெகுல் சோக்சிஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட ரூ.9,041 கோடி மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றி உள்ளதாகவும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதையொட்டி வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

* ரூ.18 ஆயிரத்து 170 கோடியே 2 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதில், ரூ.329 கோடியே 67 லட்சம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* ரூ.9,041.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

* விஜய்மல்லையா வழக்கில் 25-ந் தேதிக்குள் (நாளை) பங்கு விற்பனை மூலம் ரூ.800 கோடியை மீட்க முடியும்.

* பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே பங்குகள் விற்பனை மூலம் ரூ.1,357 கோடியை மீட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News