செய்திகள்
கோப்பு படம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

Published On 2020-10-17 08:52 GMT   |   Update On 2020-10-17 08:52 GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி 10 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் வீட்டில் வைத்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.

இந்தநிலையில் அந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழனிசாமிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலன் மற்றும் படிப்பு செலவுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட பழனிசாமியை போலீசார் கோர்ட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News