ஆன்மிகம்
சிவன் வழிபாடு

புதன் கிழமை வரும் பிரதோஷ விரதமும்.. தீரும் பிரச்சனைகளும்...

Published On 2021-02-24 04:03 GMT   |   Update On 2021-02-24 04:03 GMT
ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. புதன் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் கடைபிடித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.

புத பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள், புதன்கிழமை. இந்தநாளில் பிரதோஷ வழிபாடு செய்யும் மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், புதன் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். புதன் நீச்சம் பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிப்பில் ஆா்வம் இல்லாதவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.

குழந்தைகள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். இளம் வயதினரின் தவறான நட்பால் ஏற்படும் பாதிப்பு தீரும். நண்பர்களிடையே நல்ல நட்பு நீடிக்கும். வங்கி கடன் தீரும். காலி நிலம் தொடர்பான சர்ச்சைகள் அகலும். தோல் வியாதி, நரம்பு மண்டல பாதிப்புகள் நீங்கும். ஜோதிடர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். ஆசிரியர்களுக்கு வேலையில் இருந்து வரும் இடர்கள் குறையும். பத்திரம், அடமானம், ஜாமீன் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பூமி லாபம் உண்டாகும். புதனை வலிமைப்படுத்த பச்சை பயிறு, சுண்டல் தானம் செய்யுங்கள்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News