செய்திகள்
வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

அபராதம் விதித்ததால் காருக்கு தீ வைத்த வாலிபர் - வைரல் வீடியோக்களை நம்பலாமா?

Published On 2019-10-21 06:21 GMT   |   Update On 2019-10-21 06:21 GMT
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதால் வாலிபர் தனது காரை தீயிட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



ஃபேஸ்புக்கில் வைரலாகும் வீடியோ ஒன்றில் வாலிபர் ஒருவர் தனது காருக்கு தீயிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளிடம் துப்பாக்கியை வழங்கி வீதியில் போராட்டம் செய்யும் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வாலிபருக்கு ரூ. 35,000 அபராதம் விதித்ததால் கோபத்தில் காரை தீயிட்டதாக கூறப்படுகிறது.

இரண்டு நிமிடங்கள் ஓடும் வைரல் வீடியோ ஏ.பி.பி. கங்கா செய்தியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் வாலிபர் போலீஸ் அதிகாரி மற்றும் சாலையில் இருந்தவர்களை துப்பாக்கியை காண்பித்து மிரட்டும் காட்சிகளும், தீயில் எரியும் கார் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து மூன்று குழந்தைகள் சாலையில் அமர்ந்து இருக்கின்றனர்.

வைரல் வீடியோவிற்கு இந்தியில் தலைப்பிடப்பட்டு இருக்கிறது. அதில், “ரூ. 35,000 அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாலிபர் தனது காருக்கு தீ வைத்து, மனைவி மற்றும் குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபட செய்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் பற்றி இணையத்தில் தேடியபோது இந்த சம்பவம் செப்டம்பர் 25, 2019 இல் நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
 


உத்தரபிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் இருக்கும் வாலிபரின் பெயர் சுபம் சௌத்ரி ஆகும். இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஊடகத்தின் கவனத்தை ஈர்க்க நடத்தப்பட்டது என உள்ளூர் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபம் சௌத்ரி மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஷர்மா இருவரும் இணைந்து ஊடகத்தின் கவனத்தை ஈர்த்து சுபம் சௌத்ரியை பிரபலப்படுத்த இந்த சம்பவத்தை நடத்தியது காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின் இருவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வைரல் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. இதையொட்டி இதுபோன்று பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News