செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 82.65 அடியாக உயர்வு

Published On 2021-07-31 06:17 GMT   |   Update On 2021-07-31 06:17 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 22 ஆயிரத்து 942 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து மேலும் சரிந்து 21 ஆயிரத்து 692 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 6 ஆயிரத்து 569 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரத்து 841 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 ஆயிரத்து 240 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக அணைகளில் இருந்து 38 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 2 அணைகளில் இருந்தும் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு 10 ஆயிரத்து 240 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியில் இருந்து இன்று 17 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலில் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு நேராக வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 22 ஆயிரத்து 942 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து மேலும் சரிந்து 21 ஆயிரத்து 692 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 14 அயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 81.97 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 82.65 அடியானது.
Tags:    

Similar News