செய்திகள்

பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு கிடைக்கிறது: கல்பனாசாவ்லா விருது பெற்ற நாமக்கல் ஜெயந்தி பேட்டி

Published On 2016-08-16 04:16 GMT   |   Update On 2016-08-16 04:16 GMT
பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு கிடைக்கிறது என்று கல்பனாசாவ்லா விருது பெற்ற நாமக்கல் ஜெயந்தி அளித்த பேட்டியில் கூறினார்.
நாமக்கல்:

நாமக்கல் நகரில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையை யுனைடெட் வெல்பர் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் பராமரிப்பு வருகிறது. இங்கு பிணம் எரிக்கும் பணியில் நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்த எம்.ஏ. பட்டடதாரி பெண் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு கல்பனா சாவ்லா விருதை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளார். விருது பெற்ற ஜெயந்தி கூறியதாவது:-

எனது தந்தை பட்டுக் குருக்கள் கூலிப்பட்டி முருகன் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வந்தார். நான் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள், எனது கணவர் வாசுதேவன் கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்.

நாங்கள் கடந்த 2000-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் வறுமை வாட்டி வதைத்ததால் இந்த வேலைக்கு வந்தேன். முதலில் நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் பூங்கா அமைக்கும் பணியில் 3 மாதம் ஈடுபட்டேன். அதன் பிறகு பிணம் எரிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என்று கேள்விப்பட்டு அந்த வேலைக்கு சேர்ந்தேன்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் மின் மயானத்தில் ஆபரேட்டராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். முட்டை வாடை கூட பிடிக்காத எனக்கு பிண வாடை சகஜமாகிவிட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் மயானத்தில் அலுவலகத்தில் மேலாளராக பதவி உயர்வு பெற்றேன். என்றாலும் பிணங்களை எரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். இதுவரை 2800 பிணங்களை எரித்துள்ளேன்.

எனது கணவர் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார். தற்போது எங்களுக்கு சொந்தமாக 3 கார்கள் உள்ளன. வருமானம் அதிகமாக வந்தாலும் இந்த தொழிலில் எனக்கு மன நிறைவு கிடைப்பதால் தொடர்ந்து இந்த பணியை செய்து வருகிறேன்.

இறந்துபோனவர்களை தெய்வமாக கருதி அவர்களுடைய இறுதி யாத்திரையை மன திருப்தியுடன் செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News