செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

Published On 2020-07-25 01:16 GMT   |   Update On 2020-07-25 01:16 GMT
வீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களை தூண்டுவதால், ஆன்லைன் சீட்டாட்டத்துக்கு தடை விதிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது.
மதுரை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை வெனன்ஸ். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 5-ந் தேதி இவர் உள்பட 5 பேரை, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூடங்குளம் போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சிலுவை வெனன்ஸ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு பள்ளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் மனுதாரர் சொந்த ஊருக்கு சென்று உள்ளார். அங்கு தனது பழைய நண்பர்களை சந்தித்து இருக்கிறார். விஜயாபதி ஊராட்சியில் உள்ள பண்ணையில் கடந்த 5.6.2020 அன்று நண்பர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் மனுதாரர் அவர்கள் விளையாடுவதை பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கிறார். அங்கு திடீரென வந்த போலீசார் அனைவரையும் கைது செய்து உள்ளனர்.

தமிழக விளையாட்டு சட்டத்தின்படி, பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் மனுதாரர் தனது நண்பரின் பண்ணை வீட்டில் இருந்து உள்ளார். அங்கு அவருடைய நண்பர்கள் மட்டும்தான் விளையாடிக் கொண்டு இருந்து உள்ளனர். அந்த இடம் முட்புதருக்கு அருகில் இருந்து உள்ளது. இதை பொது இடமாக கருத முடியாது. பொது இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டால்தான் வழக்குப்பதிவு செய்ய இயலும் என சட்டம் கூறுகிறது. எனவே மனுதாரர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

இந்த நேரத்தில் போலீசாரிடம் இந்த கோர்ட்டு ஒரு கேள்வியை எழுப்புகிறது. அதாவது, ஒருசிலர் முட்புதருக்குள் சில அட்டைகளை வைத்து விளையாடினார்கள் என தமிழ்நாடு விளையாட்டுச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்கிறீர்கள். ஆனால் இதே தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் ரம்மி என்ற சூதாட்ட விளையாட்டை விளையாடுவதற்கு மட்டும் எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் காளான்கள் போல முளைத்துக்கொண்டு இருக்கின்றன. இதுபோன்ற ஏராளமான விளையாட்டு விளம்பரங்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் வருகின்றன.

இவை அனைத்தும் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்களை தூண்டும் வகையில் செயல்படுகின்றன. அதாவது வீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களை தூண்டுகின்றன.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களால் அவர்களின் குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படுத்துகிறது.

இந்திய தொழில்நுட்ப சட்டங்களுக்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இணங்குவதில்லை என்று தமிழக சட்டம்-ஒழுங்கு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே ஆன்லைன் ரம்மியை திறந்தவெளி விளையாட்டாக கருத முடியாது. இதில் சூதாட்டம் நடக்கிறது என்பதையும்,

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கென எந்த விதியும் இயற்றப்படவில்லை என்பதையும் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒப்புக்கொண்டு உள்ளார்.

எனினும், பணம் செலுத்தி ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடுவதற்கு இடம் அளிக்காத வகையில் தெலுங்கானா மாநில அரசு, தெலுங்கானா விளையாட்டுச் சட்டத்தை 2017-ம் ஆண்டு திருத்தம் செய்து உள்ளது. இந்தியா பலதரப்பட்ட வளமான பாரம்பரியத்தை கொண்டு உள்ளது.

இங்கு விளையாட்டு என்பது முக்கியமான பொழுதுபோக்கு வளம் மட்டுமல்ல; கடின உழைப்பிற்கான மதிப்பையும் அளிக்கிறது. ஒழுக்கத்துக்காகவும், உடலை சீராக வைக்கவும் விளையாட்டுக்களை வகைப்படுத்தி வைத்து உள்ளோம். ஆனால் தற்போது வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளை சமாளிக்க ஒழுங்குமுறை அமைப்பை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்.

“சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்” என்ற திருக்குறள் மூலம் “ஒருவனுக்கு துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழை கெடுக்கின்ற சூது போல வறுமையை தருவது வேறொன்றும் இல்லை” என்கிறார், திருவள்ளுவர்.

அவர் மற்றொரு குறளில்,

“உடைசெல்வம் ஊண்ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்” என்று சொல்லி இருக்கிறார்.

இந்த குறளுக்கு, “சூதாடுவதை ஒருவன் செய்து வந்தால் புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனை சேராமல் ஒதுங்கிவிடும்” என்பது பொருள்.

இது தற்போதைய ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் பொருந்தும். படித்த இளைஞர்கள் பணம் வைத்து சூதாட்டத்தை பழகினால் அது சமுதாயத்துக்கு பெரும் ஆபத்தாக முடியும். இதுபோன்ற விளையாட்டுகளுக்காக நகை பறிப்பு சம்பவங்களில் பட்டதாரிகள் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.

எனவே இந்த விளையாட்டுகளை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் நாகலாந்து, சிக்கிம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தங்களின் விளையாட்டு சட்டங்களை திருத்தி உள்ளன.

பல குடும்பத்தினரின் ரத்தத்தை லாட்டரிச்சீட்டு உறிஞ்சியபோது, 2003-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, லாட்டரி விற்பனையை தடைசெய்தது. இதனால் ஏராளமான தற்கொலைகளை அரசாங்கம் தடுத்தது. அதன்மூலம், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும், குடும்பத்தினரின் அமைதியையும் காப்பாற்றி நற்பெயரை சம்பாதித்தது.

அதே ஆண்டில் அதிக வட்டி வசூலை குறிக்கும் தினசரி வட்டி, மணி நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றையும் தடை செய்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை தமிழக அரசு துடைத்தது.

அந்த வகையில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தீங்குகளை கவனத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற இந்த கோர்ட்டு அறிவுறுத்துகிறது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News