லைஃப்ஸ்டைல்
எங்களை இப்படி எல்லாம் சொல்லி காயப்படுத்தாதீங்க.. குழந்தைகளின் குமுறல்

எங்களை இப்படி எல்லாம் சொல்லி காயப்படுத்தாதீங்க.. குழந்தைகளின் குமுறல்

Published On 2021-05-18 03:27 GMT   |   Update On 2021-05-18 03:27 GMT
குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம்.
குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். வாயாடி.. சண்டைக்காரன்.. திருடன்.. பொய் பேசுகிறவன்.. பிடிவாதக்காரன்.. சுயநலவாதி.. என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி அதிகமாக பயன்படுத்தக்கூடியவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட `வார்த்தை முத்திரை' குத்தப்படுவது, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை கலந்த தவறாகும். அது அவர்களை காயப்படுத்திவிடும்.

குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.

5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.

வீ்ட்டில் எத்தனையோ பொம்மைகள் இருந்தாலும், கடைக்குச் செல்லும்போது புதிதாக பார்க்கும் இன்னொரு பொம்மையை பார்த்ததும், அதையும் வாங்கித்தந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பது குழந்தைகளின் இயல்பு. பிடிவாதம் பிடிப்பது அதன் இயற்கை குணாதிசயம். அதை காரணங்காட்டி `பிடிவாதக்காரன்' என்று முத்திரை குத்தினால், அந்த குழந்தை அப்படியே ஆகிவிட வாய்ப்புண்டு. அதே நேரத்தில் பிடிவாதம் பிடித்து எதையும் சாதிக்க அனுமதிக்கவும்கூடாது. சிறிய விஷயங்களில் பிடிவாதம்பிடித்து சாதிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் பிரச்சினைக்குரிய பெரிய விஷயங்களையும் பிடிவாதத்தால் சாதிக்க முயற்சிப்பார்கள்.

பெற்றோரும், தங்கள் இயல்பு என்ன என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்திவிடவேண்டும். `தேவையானதை கேட்டாலே வாங்கித்தந்துவிடுவார்கள். தேவையில்லாததை எப்படி பிடிவாதம் பிடித்தாலும் வாங்கித்தரமாட்டார்கள்' என்ற தெளிவு அவர்களுக்கு கிடைத்திட வழிகாணவேண்டும்.

சிறுவனோ, சிறுமியோ தொடர்ந்து பிடிவாதம்காட்டினால் பெற்றோர் உஷாராகிவிடவேண்டும். அடிக்கடி பிடிவாதம்காட்டும் பிள்ளைகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களது மனஅழுத்தத்திற்கு காரணமான சம்பவம் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலேயோ, பள்ளியிலோ, வெளி இடங்களிலோ ஏற்படலாம். மனம்விட்டுப் பேசி அதற்கான காரணத்தை கண்டறியவேண்டும்.
Tags:    

Similar News