செய்திகள்
குமணன்தொழு கிராமத்தில், காய்ப்பு தன்மை இல்லாத கத்தரி செடிகளை விவசாயி ஒருவர் பிடுங்கிய காட்சி.

கடமலைக்குண்டு அருகே காய்ப்பு தன்மை இல்லாததால் கத்தரி செடிகளை பிடுங்கி எறியும் விவசாயிகள்

Published On 2020-11-30 10:56 GMT   |   Update On 2020-11-30 11:25 GMT
கடமலைக்குண்டு அருகே, காய்ப்பு தன்மை இல்லாததால் விரக்தி அடைந்த விவசாயிகள் கத்தரி செடிகளை பிடுங்கி எறிகின்றனர்.
கடமலைக்குண்டு:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு, மண்ணூத்து உள்ளிட்ட பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில், தென்மேற்கு பருவமழை பெய்யும் ஜூலை மாதத்தில் கத்தரிக்காய் பயிரிடப்படும்.

அவ்வாறு பயிரிடப்படும் கத்தரி செடிகளில் 40 நாட்களில் காய்கள் காய்க்க தொடங்கும். ஆனால் குமணன் தொழு, மண்ணூத்து பகுதிகளில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் கடந்த ஜூலை மாதம் கத்தரிக்காய் விதைக்கப்பட்டது. அந்த செடிகள் வளர்ந்து 100 நாட்களை கடந்தும் தற்போது வரை காய்கள் காய்க்கவில்லை. செடிகளுக்கு உரங்கள் வைத்தும், மருந்துகள் தெளித்தும் பயனில்லை.

இதன் காரணமாக விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். தங்களது நிலங்களில் பயிரிட்டுள்ள காய்ப்பு தன்மை இல்லாத அந்த கத்தரி செடிகளை பிடுங்கி எறிந்து வருகின்றனர். இதுகுறித்து குமணன்தொழு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

நடப்பு சீசனில், பயிரிடப்பட்ட கத்தரி செடியின் வளர்ச்சி வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. ஒவ்வொரு செடியும் சுமார் 5 அடி உயரத்துக்கு வளர்ந்தது. இதனால் கத்தரிக்காய் விளைச்சல் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் தற்போது வரை காய்கள் காய்ப்பதற்கு உண்டான எந்த அறிகுறியும் செடிகளில் ஏற்படவில்லை. இதுபோன்ற காய்கள் காய்க்காத மலட்டு விதை காரணமாக 120 நாட்கள் உழைப்பு வீண் போய்விட்டது.

காய்ப்புத் தன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை போய்விட்டதால் கத்தரி செடிகளை வேரோடு பிடுங்கி எறிந்து வருகிறோம். மலட்டு விதையால் தற்போது கத்தரிக்காய் பயிரிட்ட விவசாயிகள் அனைவருக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குமணன்தொழு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, கத்தரிக்காய் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணத் தொகை வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News