செய்திகள்
வாக்குச்சீட்டு

நாளை 2ம் கட்ட தேர்தல்- ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2021-10-08 09:26 GMT   |   Update On 2021-10-08 10:31 GMT
2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 35 ஒன்றியங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சென்னை:

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. மொத்தம் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

அடுத்த கட்டமாக நாளை 9-ந்தேதி (சனிக்கிழமை) 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12,376 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். கிராமப் பகுதிகளில் வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் முகாமிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், உள்பட முக்கிய பிரமுகர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளியாக பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.

இதையொட்டி கிராமப் பகுதிகளில் முகாமிட்டு இருந்த வெளியூர் ஆட்கள் நேற்று மாலை முதல் வெளியேற தொடங்கினார்கள்.

2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதையொட்டி 9 மாவட்டங்களில் மொத்தம் 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு என 4 ஓட்டு போடவேண்டும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு இளம்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் ஒரு வாக்குச்சாவடியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு இரு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். அதில் ஒரு கிராம ஊராட்சி வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

நாளை (9-ந்தேதி) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்க உள்ளதையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டு பெட்டிகள், ஓட்டுச் சீட்டுகள், அழியாத மை ஆகியவற்றை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் 100 மீட்டர் தூரத்துக்கு அடையாள கோடு வரையப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 13 வகையான பொருட்களுடன் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

2-ம் கட்ட வாக்குப்பதிவின்போது 17,130 போலீசார், 3,405 ஊர்க்காவல் படையினர் உள்பட 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்றுள்ளனர்.

2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 35 ஒன்றியங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



மாநில தேர்தல் ஆணையம் சார்பில் 9 மாவட்டங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி இந்த 9 மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா ஒரு மூத்த அதிகாரி வீதம் வட்டார தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 9 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலமும் வீடியோ மூலமும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசாரை நிறுத்தி நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

வாக்குச்சாவடிகளில் மோதல் ஏற்படாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. நாளை 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்ததும் அந்த ஓட்டுப்பெட்டிகளும் இந்த மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.

அதன் பிறகு வருகிற 12-ந்தேதி காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் முடிவுகள் வெளிவர தொடங்கும். வருகிற 20-ந் தேதி வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கிறார்கள்.


Tags:    

Similar News