செய்திகள்
முககவசம்

சுற்றுலா பயணிகள் முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-11-20 04:10 GMT   |   Update On 2020-11-20 04:10 GMT
பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்து உள்ளார்.
ஊட்டி:

பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, கல்லார் பூங்கா போன்ற பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து பூங்காக்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டு செப்டம்பர் 9-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இந்த பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அரசு அறிவித்த செயல்பாட்டு நடைமுறைகளின் படி அனைத்து பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி முன்னேற்பாடு நடவடிக்கையாக நுழைவு வாயிலில் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், உடல் வெப்ப பரிசோதனை செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தற்போது மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்று பரவாமல் இருக்க பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சமூக இடை வெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முககவசம் அணியவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். இதை கண்காணிக்க பூங்காக்களில் ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, சுற்றுலா பயணிகள் பூங்காக்களுக்கு வருகை தரும்போது மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு கவனமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் உத்தரவின் படி சுகாதார அலுவலர்கள், ஊழியர்கள் அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் ஊட்டி கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பூங்கா சாலையில் பொதுவெளியில் புகைப்பிடித்ததாக சுற்றுலா பயணி ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. அரசு விதிமுறைகளை மீறியதாக ரூ.4, 000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வு நடத்தி அரசின் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் ஊட்டி கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பூங்கா சாலையில் பொதுவெளியில் புகைப்பிடித்ததாக சுற்றுலா பயணி ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News