உள்ளூர் செய்திகள்
டெங்கு கொசு

பயமுறுத்தும் கொசுக்கள்- தவிக்கும் சென்னை வாசிகள்

Published On 2022-01-21 07:55 GMT   |   Update On 2022-01-21 10:37 GMT
கொசுக்களால் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் கடந்த 20 நாட்களில் தமிழகம் முழுவதும் 863 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

மழை காலங்களிலும், குளிர் காலத்திலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் கொசுக்களால் உண்டாகும் டெங்கு காய்ச்சலும் பரவும்.

எனவே இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களை எச்சரிப்பது உண்டு.

மேலும் கொசுக்களை கட்டுப்படுத்த தண்ணீர் தேங்கிய இடங்களில் மருந்து தெளிப்பது மற்றும் காலை, மாலை நேரங்களில் புகை அடிப்பது போன்ற பணிகளும் நடைபெறும்.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொசு தொலை அதிகமாக உள்ளது. பகலில் கூட கொசுக்கள் துரத்துகிறது. இரவு நேரத்தில் அலை அலையாக பறந்து வந்து கடிப்பதால் தூக்கத்தையும் தொலைத்து பலரும் அவதிப்படுகிறார்கள்.

நகரில் பல இடங்களில் இன்னும் மழை தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது.

மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் 15 மண்டலங்களிலும் பணியாற்றுகிறார்கள். அவர்களில் சுமார் 200 பேர் மட்டுமே கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மற்றவர்கள் கொரோனா பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தினமும் காலை 6 முதல் 7.30 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7.30 மணி வரையிலும் புகை அடிக்கும் பணி நடப்பதாக கூறுகிறார்கள்.

வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளும்படி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் திறந்த வெளிகளில் தண்ணீர் தேங்கி கிடப்பது பற்றி மாநகராட்சிக்கு பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் சிலர் டெங்குவால் பாதிக்கப்பட்ட பிறகே மருந்து தெளிக்க வந்ததாக பாடி பகுதியை சேர்ந்தவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

கொசுக்களால் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் கடந்த 20 நாட்களில் தமிழகம் முழுவதும் 863 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு (2021) டெங்கு காய்ச்சலால் 6039 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிக்குன் குனியாவால் 150 பேரும், மலேரியாவால் 500 பேரும், எலி காய்ச்சலால் 1028 பேரும், தொற்று காய்ச்சல் களால் 2220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Tags:    

Similar News