செய்திகள்
வெற்றிக்கோப்பையுடன் ஆந்த்ரே ரூப்லெவ் போஸ் கொடுக்கிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் : ரஷிய வீரர் ரூப்லெவ் ‘சாம்பியன்’

Published On 2020-10-19 18:56 GMT   |   Update On 2020-10-19 18:56 GMT
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆந்த்ரே ரூப்லெவ், போர்னா கோரிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
மாஸ்கோ:

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ரஷியாவில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த ரஷிய வீரர் ஆந்த்ரே ருப்லெவ், 27-வது இடம் வகித்த குரோஷிய வீரர் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆந்த்ரே ரூப்லெவ் 7-6 (7-5), 6-4 என்ற நேர்செட்டில் போர்னா கோரிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த ஆண்டில் ரூப்லெப் கைப்பற்றிய 4-வது ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். ஏற்கனவே தோகா, அடிலெய்டு, ஹம்பர்க் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருந்தார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக பட்டம் வென்ற நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் (செர்பியா), ரூப்லெவ் சமன் செய்தார். இந்த வெற்றியின் மூலம் ரூப்லெவ் தரவரிசையில் 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று போட்டிக்கு ரூப்லெவ் முதல்முறையாக தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.
Tags:    

Similar News