செய்திகள்
கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி

சாலையோரம் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை

Published On 2020-10-24 11:10 GMT   |   Update On 2020-10-24 11:10 GMT
கடலூரில் சாலையோரம் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்:

தமிழ்நாட்டின் இரண்டாவது நீளமான கடற்கரையாக கருதப்படுவது கடலூர் சில்வர் பீச்சாகும். கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் இந்த சில்வர் பீச், குதிரையேற்றம், படகு சவாரி உள்பட பல பொழுதுபோக்குகளை தரும் இடமாக விளங்குகிறது. சிறுவர்களின் மனதை கவரும் வகையில் ஒரு படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையோரம் அமைந்துள்ளது.

இந்த கடற்கரைக்கு செல்லும் சாலையின் ஓரங்களில் சில சமூக விரோதிகள் இரவு நேரத்தில் தேவையற்ற கட்டிட கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் குப்பைகள் போன்றவற்றை கொட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கடலூர் சில்வர் பீச் பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அங்கு சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை பார்த்த கலெக்டர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிட நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து சில்வர் பீச் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அவ்வப்போது கண்காணித்து, பராமரிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது, துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, நகராட்சி ஆணையர் அரவிந்த்ஜோதி, தாசில்தார் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News