செய்திகள்
ஆதார் அட்டை

தபால்துறை சார்பில் நீலகிரியில் 3 இடங்களில் ஆதார் சேவை தொடக்கம்

Published On 2020-10-15 10:20 GMT   |   Update On 2020-10-15 10:20 GMT
நீலகிரியில் தபால்துறை சார்பில் 3 இடங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 9-ந் தேதி உலக தபால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம், கிளை அஞ்சலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தபால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தபால் வாரத்தை முன்னிட்டு ஆதார் கேந்ரா சேவை தொடக்க நிகழ்ச்சி ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் குணசீலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊட்டி பிரிக்ஸ் (சி.பி.எஸ். இ.) பள்ளி முதல்வர் சிவப்பிரகாஷ் ஆதார் கேந்ரா சேவையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் குணசீலன் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 இடங்களில் ஆதார் கேந்ரா சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆதார் பதிவு செய்தல், முகவரி மாற்றம், புகைப்படம், பயோமெட்ரிக் புதுப்பித்தல், பெயர், பாலினம், பிறந்த தேதி புதுப்பித்தல், ஆதார் பதிவிறக்கம் போன்றவற்றுக்கு நேரடியாக வந்து பயன்பெறலாம்.புதியதாக ஆதார் கார்டு பெற சேவையை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் செலுத்தி ஆதார் சேவை பெறலாம்.குன்னூர் தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இருந்து வந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இதனால் ஊட்டியில் பாஸ்போர்ட் சேவை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தபால் வாரத்தையொட்டி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடந்தது. இதில் ஜூனியர் பிரிவில் கோவை மண்டல அளவில் ஊட்டி பிரிக்ஸ் (சி.பி.எஸ்.இ.) பள்ளி மாணவர் ஜெய் ஆகாஷ் முதலிடம் பிடித்தார். அவருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News