செய்திகள்
கொலை செய்யப்பட்ட பெண்

தூத்துக்குடியில் கள்ளத்தொடர்பு தகராறில் இளம்பெண் படுகொலை - ஆட்டோ டிரைவர் கைது

Published On 2019-11-11 10:10 GMT   |   Update On 2019-11-11 10:10 GMT
தூத்துக்குடியில் கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கவிதா(வயது30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மற்றும் 2 குழந்தைகளையும் பிரிந்து தூத்துக்குடியில் தனியாக வசித்து வந்தார்.

முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு லாரி செட்டில் கணக்காளராக கவிதா வேலைபார்த்து வந்தார். அப்போது அதே பகுதியில் நேதாஜிநகரை சேர்ந்த எட்வின் என்பவர் ஒரு ஐஸ் பிளாண்டில் வேலை பார்த்து வந்தார். அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது கள்ளகாதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து மாதாநகர் அருகே உள்ள குமரன் தியேட்டர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். அந்த வீடு வசதியாக இல்லாததால் விவேகானந்தன் நகர் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் நேற்று முன்தினம் குடியேறினர்.

அன்று இரவு வேலைக்கு சென்ற எட்வின் மறுநாள் காலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது கவிதா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவர் தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டை திறந்து சென்று கவிதாவின் உடலை மீட்டனர். கவிதாவின் கை, கால்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. தீயில் கருகியதால் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது. இதையடுத்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவிதா பிணமாக கிடந்த வீட்டு அறையின் கதவு தனியாக கழற்றி எடுக்கும் நிலையில் இருந்ததாலும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாலும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் வசித்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ஜோதிபாஸ் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கருப்பசாமி(32) கவிதாவின் வீட்டிற்கு வந்துசென்றதாக கூறினர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கவிதாவை கொன்று உடலை தீவைத்து எரித்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

கவிதாவிற்கு எட்வினுடன் வசித்து வந்தபோது பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டை காலி செய்யும்போது அந்த பொருட்களை கருப்பசாமியின் ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கவிதாவும், கருப்பசாமியும் தனிமையில் இருந்த போது கவிதாவுக்கு அடிக்கடி போன் வந்தது.

உடனே கருப்பசாமி போனை ஆப் செய்யுமாறு கூறினார். ஆனால் கவிதா போனை ஆப் செய்யாமல் அடிக்கடி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி வீட்டில் இருந்த கட்டையால் கவிதாவை தாக்கியுள்ளார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினரை அழைப்பதற்காக கவிதா வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றுள்ளார்.

ஆனால் அதற்குள் கருப்பசாமி, கவிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க மண்எண்ணையை எடுத்து கவிதாவின் உடலில் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

மேற்கண்டவை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கவிதாவின் உடலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் வரை அந்த இடத்தில் கருப்பசாமியும் இருந்துள்ளார். ஆனால் அவர் எதுவும் தெரியாதது போல் நின்றுகொண்டு போலீசாரின் நடவடிக்கையை கண்காணித்துள்ளார்.

போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது கவிதாவின் வீட்டிற்கு கருப்பசாமி வந்து சென்ற தகவலை கூறியிருக்கின்றனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். முதலில் தனக்கும், கவிதா சாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாததுபோல் கருப்பசாமி நடித்துள்ளார்.

பின்னர் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால் கவிதாவை கொன்றதை கருப்பசாமி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
Tags:    

Similar News