செய்திகள்
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

நாளை வ.உ.சி. 150-வது பிறந்தநாள் விழா: தெலுங்கானா கவர்னர் தூத்துக்குடி வருகை

Published On 2021-09-04 04:26 GMT   |   Update On 2021-09-04 04:26 GMT
தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் வ.உ.சி. பிறந்தநாள் விழா தொடக்க நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசுகிறார்.
தூத்துக்குடி:

வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் காலை 7.15 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறார்.

அங்கிருந்து ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதன்பின்னர் தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். காலை 10.30 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் வ.உ.சி. பிறந்தநாள் விழா தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.



விழாவில் தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்த வ.உ.சி. கல்விக்கழகம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கொரோனாவில் சிறப்பாக பணியாற்றிய 2 டாக்டர்கள், ரெங்கநாதபுரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கூடம், மரம் நடுவதில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு உள்ளிட்டவர்களுக்கு வ.உ.சி. பெயரில் விருதுகளை வழங்குகிறார்.

வ.உ.சி. பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலும் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன். கீதாஜீவன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். மேலும் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர்.

இதேபோல் நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி.யின் உருவச்சிலைக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு மரியாதை செலுத்துகிறார்.


Tags:    

Similar News