தமிழ்நாடு
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர்கள்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்களை அரிவாளால் வெட்டிய கொடூரம்

Published On 2022-01-26 05:21 GMT   |   Update On 2022-01-26 05:25 GMT
வேதாரண்யம் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் மீனவர்களை அரிவாளால் வெட்டி ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:

நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன் வசந்தபாலன் (வயது 25) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மல், மணிகண்டன், தில்லைநாதன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.

நள்ளிரவில் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் இரண்டு படகில் வந்தனர்.

திடீரென்று தமிழக மீனவர்கள் படகில் அத்துமீறி ஏறி வசந்தபாலன் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டினர்.

படகில் இருந்த மீன்கள், 2 செல்போன், ஜி.பி.எஸ் கருவி, வலைகள் , படகு இன்ஜின் ஆகிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர். இதையடுத்து தாங்கள் வந்த படகில் ஏறி ரப்பர் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.

இந்த கொடூர தாக்குதலில் 4 மீனவர்களும் பலத்த காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காய வலியை பொருட்படுத்தாமல் அவசரம் அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சக மீனவர்களின் உதவியோடு வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தில்லைநாதன், மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கும், வசந்தபாலன், நிர்மல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நேற்றுமுன்தினம் இரு வேறு இடங்களில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். தற்போது இன்றும் அதுபோல் சம்பவம் நடந்துள்ளது மீனவர்கள் மத்தியில் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News