செய்திகள்
ரஜினிகாந்த்

என் மீது பாஜக சாயம் பூச முயற்சி- ரஜினிகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2019-11-08 06:36 GMT   |   Update On 2019-11-08 08:32 GMT
தன் மீது பாஜக சாயம் பூசுவதற்கு முயற்சி நடைபெறுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:

நடிகர் ரஜினி காந்த்தை பாஜகவில் சேர்க்க முயற்சி நடப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பதுபோன்று, என் மீது பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. என்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்கிறது. வள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்ட மாட்டேன். பாஜகவில் சேரவோ, கட்சியில் சேர்ந்து தலைவர் ஆக வேண்டும் என்றோ எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. 

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். பேசவேண்டிய விசயத்தை விட்டுவிட்டு திருவள்ளுவர் விசயத்தை சர்ச்சையாக்கியது அற்பத்தனமானது. மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது.

திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். திருவள்ளுவர் போன்ற ஞானிகள் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். 

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது. எனக்கு மத்திய அரசு விருது வழங்குவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News