ஆன்மிகம்
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் திருத்தலம்

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் திருத்தலம்

Published On 2021-11-03 05:07 GMT   |   Update On 2021-11-03 05:07 GMT
ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம்.
சென்னையிலிருந்து 50 கி.மீ, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்பாச்சூர் வாசீஸ்வரர் திருத்தலம்.

இத்திருத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முன் மூங்கில் காடாக இருந்த பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று வளர்ந்து மூடியது. அந்தப் புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு தினந்தோறும் பால் சுரந்தது. இதை கண்ட இடையன் அங்குள்ள மன்னவனுக்கு தகவல் அளித்தார். இதை அறிந்த மன்னன் அங்கு செனறு புற்றின் அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு சதுர வடிவில் ஆவுடையார அமைத்து கோயில் எழுப்பினான்.

மூங்கில் காடில் தோன்றியதால் சிவனுக்கு “பாசூர் நாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. பாசூர் என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.

ஒரு முறை ஸ்ரீ ஆதிசங்கரர் வடமாநிலத்தில் இருந்து காஞ்சி நகருக்கு யாத்திரை சென்று கொண்டிருக்கும் பொழுது திருப்பாச்சூர் அருகே வரும்போது மூங்கில் காட்டின் அருகே வரும்போது உஷ்ண நிலையை கண்டு ஏதோ தீப்பற்றி எரிவது போல் உணர்ந்தார். பின்பு தன் ஞானதிருஷ்டியால் மூங்கிலை வெட்டும்போது லிங்கத்தின் மேல் தழும்பு ஏற்பட்டுள்ளது இதனால் சாமி உஷ்ணமாக இருப்பதை ஞானத்தில் அறிந்தார்.

பின்பு சுவாமியின் உஷ்ண நிலையை சாந்தம் அடைய கருவறை வெளியே அர்தம் மண்டபத்தில் சுவாமியின் வலது பக்கத்தில் சக்தி வாய்ந்த யந்திரங்களை ஸ்ரீசக்கரம், சிவபூஜை எந்திரமும் பிரதிஷ்டை செய்து சிவனை(பாசூர்) வழிபட்டார். அதன் பின்பு ஸ்வாமி உஷ்ண நிலையை குறைத்ததும் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

இத்திருத்தலத்தில் தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளது மேலும் கிழக்கு நோக்கி இரட்டைகாளி, சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிரகாரம் செல்ல வழி உள்ளது. 2வது பிரகாரத்தில் மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

திருப்பாச்சூர் தலத்திலும் ஈசனுக்கு வலது புறம் அம்பிகையும் இந்த இரண்டு சந்நிதிகளுக்கு இடையே விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமண்யர் என ஒரே வரிசையில் அனைவரும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள ஸ்வாமி சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. இதனால் சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை மற்றும் வினை தீர்த்த ஈஸ்வரர் லிங்கம் இருக்கிறது. இதில் 11 விநாயகர் சிலைகளில் ஒன்று மட்டும் வலம்புரி விநாயகர் மற்றும் கேது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு கேது தோஷம் நிவிர்த்தி பரிகாரம் செய்ய 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 கைப்பிடி அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

திருத்தலத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். தேவாரப் பாடல்பெற்ற 32 தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம்.

ஸ்ரீ வீராகவப்பெருமாள் சூலை நோய் ஏற்பட்டு சிவபெருமானை வழிபாடு செய்ய பிரதிஷ்டை செய்யப்பட்ட திருமேனி வினை தீர்த்த ஈஸ்வரர் பூஜை விக்னங்கள் இன்றி நிறைவேற விநாயகப்பெருமானின் 11 சிலைகளை வீராகவப்பெருமாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இதில் திருப்பதி வெங்கடாஜலபதி தன் கல்யாணத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழிபாடு செய்த திருத்தலம்.

இத்தலத்தில் தினமும் அம்பிகை ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதால் முதல் பூஜை அம்பிகைக்கு பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
அம்பிகை, திருமால், சந்திரன், பரத்வாஜார், பிருகு மகரிஷி, சுகர், ரிஷ்ய சிருங்கர், விசுவாமித்திரர் உள்ளிட்ட 10 சித்தர்கள் பூஜை செய்த தலம்.

இத்திருத்தலத்தில் கேது தோஷம் நிவர்த்தி அடையும் இங்கு வழிபடுவர்களுக்கு திருமண பாக்கியம், உத்தியோகம், குழந்தை பாக்கியம், குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News