ஆன்மிகம்
திருப்பராய்த்துறை கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுடன் அஸ்திரதேவர்.

காவிரியில் தீர்த்தவாரி ரத்து:ஆற்றில் புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2020-10-19 05:56 GMT   |   Update On 2020-10-19 05:56 GMT
கொரோனாவால் திருப்பராய்த்துறை அகண்ட காவிரி ஆற்றில் தீர்த்தவாரி ரத்து செய்யப்பட்டதால் ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாத பிறப்பன்று துலா ஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அப்போது அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதிஉலா வந்து அகண்ட காவிரி ஆற்றை வந்தடைவார்.

அங்கு அஸ்திர தேவருக்கு துலா ஸ்நானம் செய்யப்படும். அப்போது, அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் ஆற்றில் புனிதநீராடி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வர். இந்த ஆண்டு நேற்று ஐப்பசி மாதப்பிறப்பாகும். கொரோனா பரவல் காரணமாக நேற்று ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக, கோவில் அர்ச்சகர் மற்றும் கிராம பட்டையதார்கள் 7 பேர் நேற்று அதிகாலை அகண்ட காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி நீரை எடுத்து வந்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் அபிஷேக நீர் காவிரி ஆற்றில் கொண்டு சென்று விடப்பட்டது.

பின்னர் காலை முதல் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் மற்றும் அஸ்திரதேவரை தரிசனம் செய்து சென்றனர். முன்னதாக கோவில் நுழைவு பகுதியில் பக்தர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News