செய்திகள்
பேச்சிப்பாறை அணை

பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

Published On 2019-12-02 09:56 GMT   |   Update On 2019-12-02 09:56 GMT
பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் 2-வது நாளாக வெளியேற்றப்படுகிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நாகர்கோவில்:

வடகிழக்கு பருவமழை மற்றும் குமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை நீடித்தது. குறிப்பாக அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.

நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றாறு-1 அணை பகுதியில் 8.4 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. அணை பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் மொத்த நீர்மட்டம் 48 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. அணைக்கு 1985 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் 2-வது நாளாக வெளியேற்றப்படுவதாலும், சிற்றாறுகளில் இருந்து வரும் தண்ணீர் கலப்பதாலும், கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேப்போல குழித்துறை ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் ஓடுகிறது.

இந்த சப்பாத்து பாலம் வழியாக குழித்துறை வெட்டு வெண்ணியில் இருந்து பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் மூலமும், நடந்தும் விளவங்கோடு தாலுகா அலுவலகம் உள்பட பல்வேறு பணிகளுக்கு செல்வார்கள். வெள்ளம் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.95 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 376 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. சிற்றாறு-1 அணையில் 15.94 அடி தண்ணீர் உள்ளது. 30 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு-2 அணையில் 16.04 அடி தண்ணீர் உள்ளது. 45 கனஅடி தண்ணீர் அணைக்கு வருகிறது. பொய்கை அணையில் 33.20 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 9 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த அணைகளில் இருந்து தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை.

மாம்பழத்துறையாறு அணையில் 54.12 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 12 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 12 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News